வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 29 ஜூன் 2016 (11:16 IST)

வினுப்பிரியா வழக்கில் ’பகிரங்க மன்னிப்பு’ கேட்ட சேலம் எஸ்.பி.

வினுப்பிரியா கொலை வழக்கில் லஞ்சம் கேட்ட காவல்துறையினருக்காக, சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ’பகிரங்க மன்னிப்பு’ கேட்டுள்ளார்.
 

 
சேலம் மாவட்டம், இளம்பிள்ளையை அடுத்த இடங்கனசாலை புவன கணபதி தெருவைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரதுமகள் வினுப்பிரியா. தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரின் புகைப்படங்கள், மார்பிங் மூலம் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு, பேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ளது.
 
இதுபற்றி உறவினர்கள் அண்ணாதுரைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதிர்ச்சிக்குள்ளான அவர் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். எஸ்.பி.யும் இந்த புகாரை மகுடஞ்சாவடி காவல் நிலையத்திற்கு அனுப்பி, உரிய விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளார்.
 
காவல் நிலையத்தில் உள்ளவர்கள், சைபர் கிரைம் காவல் துறையினர் உதவியுடன் விசாரணை நடத்தி வருவதாக வினுப்பிரியாவின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் மீண்டும் வினுப்பிரியாவின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து பேஸ்புக்கில் பதிவேற்றி, மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால், வினுப்பிரியாவின் தந்தை அண்ணாதுரை சங்ககிரி டிஎஸ்பி அவர்களிடம் மீண்டும் மனு அளித்துள்ளார்.
 
வில்போன் கேட்ட காவலர்:
 
இதனிடையே சைபர் கிரைம் துறையில் பணியாற்றும் சுரேஷ் என்ற காவலர் வில்போன் ஒன்று வாங்கி தந்தால் விசாரணை நடத்துவதாக வினுப்பிரியாவின் தந்தை அண்ணாதுரையிடம் லஞ்சம் கேட்டுள்ளார். அண்ணாதுரையும் அப்படியாவது உடனடியாக நடவடிக்கை எடுக்கட்டும் என்று நினைத்து, புது வில்போன் ஒன்றையும் வாங்கி தந்துள்ளார்.
 
இதன்பின் மகுடஞ்சாவடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரகாஷ் என்பவர் விசாரனை மேற்கொண்டுள்ளார். அப்போதும்,சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதில், அண்ணாதுரை மற்றும் வினுப்பிரியா ஆகியோரை போலீசார் ஒருமையில் ஆபாசமாக பேசி அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.
 
இதனால் மேலும் மேலும் வேதனைக்குள்ளான வினுப்பிரியா, திங்கட்கிழமையன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
 
மன்னிப்பு கேட்ட காவல் கண்காணிப்பாளர்:
 
இந்நிலையில், விசாரணையில் தவறாக நடந்து கொண்ட மகுடஞ்சாவடி காவல் உதவி ஆய்வாளர் பிரகாஷ், சைபர் கிரைம் ஏட்டு சுரேஷ் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அமித்குமார் சிங் உறுதி அளித்தார்.
 
மேலும், நடந்த சம்பவங்களுக்காக வினுப்பிரியாவின் பெற்றோர்களிடம் பகிரங்க மன்னிப்பும் கேட்டார். பேஸ்புக்கில் ஆபாசப் படத்தை வெளியிட்ட மர்ம நபரை கைது செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.