வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (12:22 IST)

அனிதா மரணம்: மெரினா அருகே மாணவர்கள் போராட்டம்! (வீடியோ இணைப்பு)

அனிதா மரணம்: மெரினா அருகே மாணவர்கள் போராட்டம்! (வீடியோ இணைப்பு)

தமிழகத்தில் மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அரியலூரை சேர்ந்த அனிதா என்ற மாணவி உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடினார். மாநில பாடத்திட்டத்தின் கீழ் மருத்துவப்படிப்புக்கு 200-க்கு 196.7 கட் ஆஃப் மதிப்பெண் வைத்திருந்தார் மாணவி அனிதா.


 
 
ஆனால் நீட் தேர்வு அடிப்படையில் தான் கலந்தாய்வை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டதை அடுத்து தனது கடைசி நம்பிக்கையும் உடைந்துவிட்டதே என மனமுடைந்த அனிதா சில தினங்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
 
இவரது மரணம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள், பொதுமக்கள் தன்னெழுச்சியாக அவரது மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் நிலையில் உள்ளனர்.
 
இந்த போராட்டங்கள் மீண்டும் ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவுப்படுத்தும் விதமாக உள்ளது. நேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த பல மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியல், ரயில் மறியல், மனிதச்சங்கிலி என போராட்டங்கள் நடத்தினர். இன்றும் பல இடங்களில் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

 

 
 
இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவி அனிதாவின் மரணத்துக்கு காரணமான மத்திய மாநில அரசுகளை கண்டித்து பதாகைகள் வைத்தும், மாணவி அனிதாவின் புகைப்படத்தை வைத்தும் மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
மெரினா கடற்கரைக்கு அருகே உள்ள சென்னை பல்கலைக்கழகத்தில் இந்த போராட்டம் நடைபெறுவதால் போலீசார் கவனமாக உள்ளனர். இந்த போராட்டம் மெரினா கடற்கரைக்கு நகர்ந்தால் ஜல்லிக்கட்டு போராட்டம் போல பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்துவிடும் என்பதால் உஷாராக உள்ளனர் காவல்துறையினர்.