1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 24 நவம்பர் 2014 (12:43 IST)

நள்ளிரவில் மாணவனைத் தாக்கிய காவல் துறையினர்; காவலர்களை சிறைப்பிடித்த பொதுமக்கள்

நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த கல்லூரி மாணவனை காவல் துறையினர் தாக்கியுள்ளனர். இதனால் கோபமடைந்த பொதுமக்கள் காவல் துறை அதிகாரிகளை சிறைப் பிடித்தனர்.
 
கள்ளக்குறிச்சி அருகே கச்சிராயப் பாளையம் காமராஜ் நகர் பகுதியில் பொதுவான பாதையை பயன்படுத்துவது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.
 
இதனால் நள்ளிரவு 1 மணியளவில் கச்சிராயப் பாளையம் காவல்துறை ஆய்வாளர் ராஜகண்ணன், சின்னசேலம் காவல்துறை ஆய்வாளர்  சக்திவேல் உள்ளிட்டோர் காமராஜ் நகரில் உள்ள அய்யாசாமி வீட்டுக்கு வந்துள்ளனர். அங்கு அயர்ந்து தூங்கி கொண்டிருந்த தேவாவை தட்டி எழுப்பி, நடைபெறும் பிரச்சினைகளுக்கு எல்லாம் நீ தான் காரணம் என்று கூறி தேவாவை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் தேவாவை அடித்து இழுத்து சென்று ஜீப்பில் ஏற்ற முயன்றுள்ளனர்.
 
இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு அவர்களிடமிருந்து தேவாவை விடுவித்துள்ளனர். தொடர்ந்து காவல் துறை அதிகாரிகளையும், மேலும் சில காவலர்களையும் சிறை பிடித்துள்ளனர். 
 
இதுபற்றி தகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி துணை காவல் துறை கண்காணிப்பாளர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறைப் பிடித்துப் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினார்.
 
பின்னர் பொதுமக்கள் காவல்துறை அதிகாரிகளையும், வாகனங்களையும் விடுவித்தனர். இதற்கிடையே அப்பகுதி மக்கள் இன்று காலை கச்சிராயப் பாளையத்தில் அமைச்சர் மோகனை அவரது வீட்டில் சந்தித்து முறையிட்டனர்.