வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 17 ஜனவரி 2015 (07:09 IST)

மாதொருபாகன் சர்ச்சை: சகிப்புத்தன்மையற்ற தாக்குதல்-மு.க.ஸ்டாலின்

தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவல் தொடர்பான சர்ச்சையில், அவருக்கு ஆதரவாக தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் கருத்துத் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிப்பித்திருக்கும் நிலைத் தகவலில், "தமிழ் நாவலாசிரியரும் எழுத்தாளருமான பெருமாள் முருகனை குறி வைத்து நடத்தப்படும் சகிப்புத்தன்மையற்றவர்களின் தாக்குதல்களும், போராட்டங்களும் அடிப்படைவாதிகளால் ஆதரிக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுகிறது,இவர்களுடைய ஒரே நோக்கம் அமைதியாகவும் சுதந்திரமாகவும் இருந்து கொண்டிருக்கும் தமிழக மக்கள் மத்தியில் பிரிவினையை உருவாக்குவது மட்டுமே" என்று கூறியுள்ளார்.
 
"மற்றவர்களின் உணர்வுகளை எப்போதும் மதிக்கத் தெரிந்த நாம் அரசியல் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள தனி நபரின் கருத்து சுதந்திரத்தை நிலைநாட்டுவதற்கு உறுதியுடனும் ஒற்றுமையுடனும் துணை நிற்கிறோம்" என்றும் "வோல்ட்டயரின் வாசகமான, 'நீங்கள் பேசுவதை நான் ஏற்று கொள்ளாவிட்டாலும்,உங்கள் பேச்சுரிமையை பாதுகாக்க என் உயிரையும் கொடுக்க நான் தயாராகவுள்ளேன்.' என்பதை நினைவில் வைத்துக்கொள்ள இது சரியான தருணம்" என்றும் கூறியுள்ளார்.
 
திராவிட முன்னேற்றக் கழகம் இது போன்ற மத அடிப்படைவாதத்திற்கு என்றும் எதிராக இருக்கும் என்றும் இந்திய அரசியல் சட்டம் 19ன் கீழ் வழங்கப்பட்டுள்ள பேச்சுரிமை மற்றும் கருத்துரிமையை பாதுகாக்க கழகம் இறுதிவரை எவ்வித தொய்வுமின்றி உறுதியாக துணை நிற்கும் என்றும் தன்னுடைய நிலைத் தகவலில் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.