1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 20 ஆகஸ்ட் 2018 (14:48 IST)

திருவாரூர் தொகுதி உதயநிதிக்கு வேண்டாம் : ஸ்டாலின் திடீர் முடிவு

தற்போதைக்கு உதயநிதியை அரசியல் நேரிடையாக களம் இறக்கும் முடிவை ஸ்டாலின் கைவிட்டு விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 
சமீபகாலமாக, திமுக செயல் தலைவரின் மகன் உதயநிதி ஸ்டாலின் திமுக தொடர்பான அரசியல் கூட்டங்கள் மற்றும் விழாக்களில் தவறாமல் பங்கேற்கிறார். அதோடு, அவரை மூன்றாம் கலைஞர் என புகழ்ந்து உடன் பிறப்புகள் போஸ்டர் அடித்து ஒட்டிய சம்பவங்களும் நடந்தது. 
 
எனவே, விரைவில் அவர் தீவிர அரசியலில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில்தான், திமுக தலைவர் கருணாநிதியின் மறைவை அடுத்து அவர் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வந்த திருவாரூர் தொகுதி தற்போது காலியாக இருக்கிறது.

 
எனவே, அந்த தொகுதியில் உதயநிதியை களம் இறக்க ஸ்டாலின் திட்டமிட்டிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தது. ஆனால், அந்த முடிவை ஸ்டாலின் கைவிட்டு விட்டதாக தற்போது செய்தி வெளிவந்துள்ளது.
 
ஏனெனில், ஸ்டாலின் தலைமை பொறுப்பு ஏற்கவுள்ள இந்த சூழ்நிலையில், தன் மகனை அரசியலில் முன்னிறுத்தினால், திமுக குடும்ப அரசியல் செய்கிறது அதிமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சிக்கும். அதிமுக மட்டுமல்ல, பொதுமக்களும், ஊடகங்களும் விமர்சிப்பார்கள். அது கெட்ட பெயரை ஏற்படுத்தும். எனவே, தற்போதைக்கு உதயநிதிக்கு திமுகவில் ஒரு பதவி மட்டும் அளித்து விட்டு, பின்னர் தேர்தல் அரசியலுக்கு கொண்டு வரலாம் என ஸ்டாலின் முடிவெடுத்திருப்பதாக திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
 
எனவே, திருவாரூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட வேறொரு வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.