வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 3 மார்ச் 2015 (08:22 IST)

இலங்கையின் ஏமாற்று வேலைகளுக்கு இந்தியா பலியாகக் கூடாது: திருமாவளவன் வலியுறுத்தல்

இலங்கையின் ஏமாற்று வேலைகளுக்கு இந்தியா பலியாகி விடாமல் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் உறுதியான நிலைப்பாட்டை மேற்கொள்ளவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
 
இது குறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலின் 28 ஆவது கூட்டம் திங்கள்கிழமை (மார்ச் 2) ஜெனிவாவில் தொடங்கியுள்ளது. இலங்கை அரசின் வேண்டுகோளை ஏற்று, இந்தக் கூட்டத்தில் இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட இருந்த அறிக்கை செப்டம்பர் மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
புதிய அதிபர் பதவியேற்று, இத்தனை நாட்கள் ஆனபிறகும்கூட தமிழர் பகுதிகளிலிருந்து ராணுவத்தை வெளியேற்றவோ, ராணுவத்தால் பறிக்கப்பட்ட தமிழர்களின் நிலங்களைத் திருப்பிக் கொடுக்கவோ இலங்கை அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
 
5 ஆண்டுகளுக்கு மேல் எந்தவித விசாரணையும் இல்லாமல் ரகசிய சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை விடுவிப்பது பற்றியும் இலங்கை அரசு வாய் திறக்கவில்லை. இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர்.
 
இலங்கையின் சீன ஆதரவு நிலையிலும் பெரிதாக மாற்றம் இல்லை. இந்தியா பலமுறை வலியுறுத்தியும்கூட தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு குறித்து இலங்கை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இலங்கையின் ஏமாற்று வேலைகளுக்கு இந்தியா பலியாகி விடாமல் இந்த ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் உறுதியான நிலைப்பாட்டை மேற்கொள்ளவேண்டும்.
 
தமிழர் பகுதிகளிலிருந்து இராணுவத்தை வெளியேற்றவும் இந்தியா நிர்பந்திக்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.