செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 23 மார்ச் 2019 (10:45 IST)

சூலூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு – தேர்தல் எப்போது ?

சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ மரணமடைந்ததை அடுத்து ஒரே நாளில் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏவாக பதவி வகித்தவர் அதிமுகவை சேர்ந்த கனகராஜ். இவருக்கு வயது 64. இவரது வீடு சூலூர் பகுதியில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி காலை கனகராஜ் தனது வீட்டில் தினசரி நாளிதழ் படித்துக்கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.. இவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து சூலூர் தொகுதியை காலியான தொகுதியாக அறிவிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. கனகராஜ் மரணமடைந்த ஒரே நாளில் சூலூர் தொகுதியும் காலியானதாக சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். அதனால் தமிழகத்தில் இப்போது காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 21-ல் இருந்து 22 ஆக உயர்ந்துள்ளது.

நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலோடு 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. மீதமுள்ள 3 தொகுதிகளில் வழக்குகள் நிலுவைகள் இருப்பதால் இடைத்தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்  திருப்பரங்குன்றம் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகியத் தொகுதிகளில் தேர்தல் வழக்குகளைத் தள்ளுபடி செய்துள்ள உயர் நீதிமன்றம் தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இதனால் இந்த தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அப்போது அந்த இருத் தொகுதிகளுக்கான தேர்தலோடு சூலூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.