வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 22 மே 2018 (14:01 IST)

விபத்தில் மகன் பலி - துக்கம் தாங்காமல் பெற்றோர்களும் தற்கொலை

இரு சக்கர வாகனத்தில் சென்ற மகன் விபத்தில் சிக்கி பலியான துக்கம் தாங்காமல் பெற்றோர்களும் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் திருப்பூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


 
நாமக்கல் மாவட்டம் ஈக்காட்டூர் பகுதியை சேர்ந்த சக்திவேல் (54) இவரது ஒரே மகன் நிசாந்த் (18).  சக்திவேலின் உறவினர் நீலகிரி மாவட்டம் பைகாரா பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் மகன் கிருபாகரன்(20). நிசாந்தும், கிருபாகரனும் கோவையிலிருந்து நாமக்கல் நோக்கி நேற்று மாலை பைக்கில் சென்றுகொண்டிருந்தனர்.  
 
அதே நேரத்தில் கோவையிலிருந்து பேப்பர்கப் தயாரிக்கும் இயந்திரத்தை ஏற்றி வந்த ஆட்டோ ஈரோடு நோக்கி சென்றுகொண்டிருந்தது.  அவிநாசி பைபாஸ் தேசிய நெடுஞ்சாலையில் வரும்பொழுது ஆட்டோவில் இருந்த பேப்பர்கப் தயாரிக்கும் இயந்திரம் எதிர்பாராத விதமாக தவறிவிழுந்தது.  இதையடுத்து அதேவழியில் பைக்கில் வந்த புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த கணேசன் (37) மற்றும் அவரது சகோதரரும் தவறி விழுந்த இயந்திரத்தை மீண்டும் ஆட்டோவில் ஏற்றுவதற்காக ஆட்டோ ஓட்டுநருக்கு உதவி செய்துகொண்டிருந்தனர்.
 
அப்போது அதிவேகமாக வந்த பைக் எதிர்பாராத விதமாக சாலையில் இருந்த பேப்பர்கப் இயந்திரம் மற்றும் கணேசன் மீது பயங்கரமாக மோதி விபத்திற்குள்ளானது.  இவ்விபத்தில் பைக்கில் வந்த நிசாந்த் மற்றும் கிருபாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

கணேசனது சகோதர் தூக்கி வீசப்பட்டு காயங்களின்றி தப்பித்தார். கணேசன் மீது பைக் ஏறியதால் அவருக்கு கால் மற்றும் உடல் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.  அவர் உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார். 
 
இந்நிலையில்,   விபத்தில் சம்பவ இடத்திலேயே இறந்த நிசாந்த்-ன் பிரேதத்தை அவிநாசி அரசு மருத்துவமனையில் அடையாளம் காட்டவந்த தந்தை சக்திவேல் (54) மற்றும் தாய் சுதா (45) ஆகியோர் துக்கம் தாளாமல் இரவு அவிநாசி அரசு மருத்துவமனையில் குளிர்பானத்திற்குள் விஷம் கலந்து குடித்தனர்.  தகவல் அறிந்து உறவினர்கள் சிகிச்சைக்காக திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு சிகிச்சை பலனின்றி தாய் தந்தை இருவரும் இன்று அதிகாலை உயிரிழந்தனர்.  
 
இவர்களது உடல்  திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.  இது குறித்து அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  மகனை இழந்த துக்கத்தில் பெற்றோர் இருவரும் தற்கொலை செய்து கொண்டது அவரது உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

- சி ஆனந்தகுமார்