முன்பணமா 30 லட்சம் தறோம்! – ஆசை வார்த்தைக்கு மயங்கியவருக்கு ஆப்பு வைத்த கும்பல்!
சிவகங்கையில் செல்போன் டவர் வைத்துகொள்ள அனுமதி தந்தால் 30 லட்சம் முன்பணம் தருகிறோம் என ஆசை வார்த்தை காட்டி ஆப்பு வைத்த கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி. வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்ற அழகர்சாமி தற்போது சொந்த ஊரில் வசித்து வருகிறார். சமீபத்தில் போனில் தொடர்பு கொண்ட ஒரு கும்பல் தங்களை வோடஃபோன் நிறுவன பிரதிநிதிகளாக அறிமுகப்படுத்தி கொண்டுள்ளனர்.
அழகர்சாமி வீட்டு மொட்டை மாடியில் டவர் அமைக்க அவர்கள் அனுமதி கேட்டுள்ளனர். அதற்கு முன்பணமாக 30 லட்சம் தருவதாகவும், மாதம்தோறும் வாடகை பணம் 29000 தருவதாகவும் கூறியுள்ளனர். பணத்திற்கு மயங்கிய அழகர்சாமி இதற்கு ஒத்துக் கொண்டார். அவருக்கு வோடபோன் நிறுவனம் அனுப்புவது போலவே போலியான மின்னஞ்சல் ஒன்றையும் அனுப்பியிருக்கிறார்கள்.
அதில் சிறிய டெபாசிட் தொகையாக அழகர்சாமி 40000 கட்ட வேண்டும் என கூறி ஒரு வங்கி கணக்கு விவரத்தை அளித்துள்ளார்கள். அழகர்சாமியும் அதை நம்பி 40 ஆயிரம் ரூபாயை வங்கி கணக்கில் கட்டியுள்ளார். ஆனால் அதற்கு பிறகு அவர்களிடமிருந்து போன் வரவே இல்லை. அவர்களை மீண்டும் தொடர்பு கொள்ள அழகர்சாமி முயற்சித்த போது அந்த எண் ஸ்விட்ச் ஆஃப்பில் இருந்துள்ளது.
தான் ஏமாற்றப்பட்டது உணர்ந்த அழகர்சாமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் வங்கி எண், செல்போன் எண்ணை வைத்து மர்ம கும்பலை பிடிக்க விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.