வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 18 டிசம்பர் 2014 (18:02 IST)

ஆசிரமத்தின் நிர்வாகிகள் மீது பாலியல் புகார் கொடுத்த 5 பெண்கள் தற்கொலை முயற்சி - 3 பேர் பலி

புதுவையில் ஆசிரம நிர்வாகிகள் மீது பாலியல் புகார் அளித்த 5 பெண்கள் மற்றும் பெற்றோர்களின் தற்கொலை முயற்சியி 3 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 
புதுவையில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் பக்தர்கள் தங்குவதற்காக ‘ஒயிட் டவுன்’ என அழைக்கப்படும் பகுதியில் பல குடியிருப்புகள் உள்ளது. இந்த குடியிருப்புகளில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கி சேவை செய்து வருகின்றனர்.
 
அந்த ஆசிரமக் குடியிருப்பில் பீகார் மாநிலத்தை சேர்ந்த அருணாஸ்ரீ, ராஜஸ்ரீ, நிவேதிதா, ஜெயஸ்ரீ, ஹேமலதா என்ற 5 சகோதரிகள் தங்கியிருந்து சேவை செய்து வந்துள்ளனர். இவர்களுடைய பெற்றோர்கள் வேறொரு இடத்தில் தனியாக தங்கி வந்துள்ளனர்.
 
5 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரமத்தில் தங்கியிருந்த சகோதரிகள் 5 பேரும், ஆசிரம நிர்வாகிகள் சிலர் தங்களுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக காவல் துறையினரிடம் புகார் செய்தனர். பத்திரிகைகளுக்கும் நேரடியாக புகார் அளித்துள்ளனர்.
 
ஆனால், சகோரிகள் அளித்தப் புகார்களை புதுவை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்யவில்லை. இதனால் ஆசிரம விதி முறைகளை மீறி போலீசில் புகார் அளித்ததால் 5 சகோதரிகளையும் ஆசிரம குடியிருப்பில் இருந்து வெளியேற ஆசிரம நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
 
எனினும், குடியிருப்பில் இருந்து வெளியேற சகோதரிகள் மறுத்து விட்டனர். அதோடு ஆசிரம நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆசிரம நிர்வாகத்துக்கு சாதகமாக, சகோதரிகள் வெளியேற உத்தரவிட்டுள்ளது.
 
இதனையடுத்து சகோதரிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 6 மாத கால அவகாசம் அளித்து குடியிருப்பில் இருந்து வெளியேற உத்தரவிட்டது.
 
இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் 6 மாத கால அவகாசம் முடிவடைந்ததால் உச்ச நீதிமன்ற உத்தரவை காட்டி காவல் துறையினர் மூலம் சகோதரிகளை குடியிருப்பில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்தது.
 
இதனை சாகோதரிகள் 5 பேரும் தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறியுள்ளனர். அதே சமயம், இளைய சகோதரியான ஹேமலதா குடியிருப்பின் தங்களை வெளியேற்றினால் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
 
ஆனால் புதுவை பெரியகடை காவல் துறையினரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு வந்து ஹேமலதாவை கீழே குதிக்க விடாமல் பிடித்து கொண்டார். பின்னர் அவரை பெண் போலீசார் மீட்டு கொண்டு வந்துள்ளனர்.
 
அங்கிருந்து வலுக்கட்டாயமாக சகோதரிகள் 5 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து அவர்களை சமாதானபடுத்தி அனுப்பி வைத்துள்ளனர். அவர்கள் தங்கள் பெற்றோர் தங்கியிருக்கும் வீட்டுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளனர்.
 
இந்த நிலையில் 5 சகோதரிகளும் தாய், தந்தை ஆகியோரும் காலாப்பட்டு பகுதிக்கு சென்றனர். அங்கு 7 பேரும் கைகோர்த்தபடி கடலுக்குள் இறங்கியுள்ளனர்.
 
இதனைக் கண்ட மீனவர்கள் நீந்தி சென்று 4 பேரை மீட்டனர். 3 பேரை அலை இழுத்து சென்று விட்டது. அவர்கள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.