குடியரசு தினத்தையொட்டி தீவிர சோதனை! மோப்ப நாயுடன் வெடிகுண்டு போலீசார் விசாரணை.!
குடியரசு தின விழாவை முன்னிட்டு கோவையில் வெடிகுண்டு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
வருகிற ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், மாவட்ட எல்லைகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொள்வர். அதன்படி கோவை மாநகரில் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வழிபாட்டு தளங்கள் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு இடங்களில் சோதனையை துவக்கி உள்ளனர்.
கோவை மாநகரில் ரயில் நிலையங்கள், காந்திபுரம் பேருந்து நிலையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம், உக்கடம் பேருந்து நிலையம், பூமார்க்கெட், ஸ்மார்ட் சிட்டி குளக்கரைகள், மால்கள், திரையரங்குகள், பூங்காக்கள், மருத்துவமனைகள் உட்பட கோனியம்மன் கோவில், தண்டுமாரியம்மன் கோவில், மருதமலை முருகன் கோவில், கோட்டை ஈஸ்வரன் கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதிகளில் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கண்காணிப்பு மற்றும் சோதனை பணிகள் குடியரசு தினம் முடியும் வரை தொடர்ந்து நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.