வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 24 மே 2024 (11:13 IST)

தீவிரமாகும் பேருந்து ஓட்டுனர்கள் – போலீஸ் மோதல்? – சென்னையில் மட்டும் 24 அரசு பேருந்துகளுக்கு அபராதம்!

Govt Bus
சமீபத்தில் பேருந்தில் டிக்கெட் எடுப்பது குறித்து காவலருக்கும், அரசு பேருந்து நடத்துனருக்கும் வாக்குவாதம் எழுந்த நிலையில் அரசு பேருந்துகளுக்கு அடுத்தடுத்து அபராதம் விதிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் பெரிய நகரங்கள் முதல் சிறிய கிராமங்கள் வரை இயங்கி வருகின்றன. இவற்றில் உள்ளூர், நகர பேருந்துகளில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு இலவசமாக டிக்கெட் வழங்கப்படுகிறது. சமீபத்தில் அரசு பேருந்தில் காவலர் ஒருவர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ய முயன்ற நிலையில் அந்த பேருந்தின் நடத்துனர் பேருந்தை நிறுத்தியதால் பரபரப்பு எழுந்தது.

அதை தொடர்ந்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட போக்குவரத்துக் கழகம், காவலர்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயண சலுகை இல்லை என்றும், டிக்கெட் வாங்கியே பயணிக்க வேண்டும் என்றும் அறிவித்திருந்தது. அதை தொடர்ந்து தற்போது பல பகுதிகளிலும் போக்குவரத்து போலீஸார் அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை விதித்து வருகின்றனர்.


சென்னையில் மட்டும் நேற்று ஒரு நாளில் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அருகே ஜிஎஸ்டி சாலையில் பேருந்து நிறுத்தம் இல்லாத இடங்களில் பேருந்தை நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டதாக 24 பேருந்துகளுக்கு தலா ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி உள்ளிட்ட வேறு சில நகரங்களிலும் இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காவலர்கள் டிக்கெட் எடுக்காமல் பயணிக்க கூடாது என்ற போக்குவரத்துக் கழக அறிவிப்புக்கு காவல்துறை எடுக்கும் பதிலடிதான் இந்த அபராத நடவடிக்கையா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. ஆனால் போக்குவரத்து காவலர்களோ போக்குவரத்து விதிமீறல்களுக்காக அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிப்பது இது புதிது அல்ல என்றும், வழக்கமாக நடைபெறுவதுதான் என்றும் கூறுகின்றனர்.

Edit by Prasanth.K