வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 28 ஜூலை 2015 (02:53 IST)

அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது தெரியாமலே, ஜெயலலிதாவை வரவேற்ற செந்தில் பாலாஜி

போக்குவரத்துறை அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது தெரியாமலே, முதலமைச்சர் ஜெயலலிதாவை, அமைச்சர்கள் வரிசையில் நின்று வரவேற்றுள்ளார் செந்தில் பாலாஜி.
 
தமிழக முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் ரோசய்யா செந்தில் பாலாஜியை நீக்கம் செய்துள்ளார்.
 
அத்துடன் செந்தில் பாலாஜியிடமிருந்து கட்சிப் பொறுப்பும் பறிக்கப்பட்டுள்ளது. அதன்படி கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஒரு வாரத்திற்குப் பின்பு, நேற்று மதியம் 12.20 மணி அளவில் தமிழக தலைமை செயலகத்திற்கு வந்தார். அப்போது, அங்கு, கூட்டுறவு, வணிகவரி போன்ற துறைகளின் சார்பில் நடைபெற்ற மக்கள் நலத் திட்டங்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்தார்.
 
முதலமைச்சர் ஜெயலலிதா, தலைமைச் செயலகம் செல்லும் போது, தமிழக அமைச்சர்கள் அனைவரும் தலைமை செயலகத்தின் நுழைவு வாயிலில் வரிசையாக நின்று வணக்கம் செய்து வரவேற்பது வழக்கம்.
 
இந்த நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகம், நேற்று வந்த போது, அமைச்சர்கள் வரிசையில் செந்தில் பாலாஜி 12 ஆவது வரிசையில் நின்று கொண்டிருந்தார்.
 
ஆனால், அவரைப் போக்குவரத்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக, ஜெயா டிவியில் நேற்று மதியம் 12.15 மணிக்கே ப்ளாஷ் நியூஸ் வெளியானது. 
 
ஆனால், தன்னை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட்டது தெரியாமலே, முதலமைச்சர் ஜெயலலிதாவை வரவேற்ற பின்பு, செந்தில் பாலாஜி தனது காரில் வீட்டிற்குச் சென்றார் தகவல் வெளியாகியுள்ளது.