வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 30 ஜனவரி 2018 (12:21 IST)

இந்த டீலுக்கு அப்புறம்தான் பஸ் டிக்கெட் விலை ஏத்தினாங்க - கொளுத்தி போடும் செந்தில் பாலாஜி

பேருந்து வழித்தடங்கள் முக்கிய அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட பின்னரே, பேருந்து கட்டணத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு உயர்த்தியுள்ளது என கரூர் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

 
கடந்த 19-ம் தேதி தமிழக அரசு பேருந்து கட்டணத்தை திடீரென உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது.  சரியான முன்னறிவிப்பின்றி,  பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தவறு எனவும், இதனால் தாங்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், இந்த கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என பொதுமக்களும், எதிர் கட்சி தலைவர்களும், மாணவர்களும் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில், கோவையில் நடைபெற்ற நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில்  தினகரனின் ஆதரவாளரும் கரூர் எம்.எல்.ஏ-வுமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது:
 
முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதுகெலும்பு இல்லாதவர். மக்கள் அவரை முதல்வராகவே மதிக்கவில்லை. அதனால்தான், தனது காரில் சி.எம். என ஸ்டிக்கர் ஒட்டியுள்ளார். 
 
ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றது போல் வேறு எங்கும் வெற்றி பெற முடியாது என பழனிச்சாமி பேசியுள்ளார். நான் அவர்களுக்கு ஒரு சவால் விடுகிறேன். எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வந்த பின், நான் எனது அரவக்குறிச்சி தொகுதியில் ராஜினாமா செய்கிறேன். அதேபோல், பழனிச்சாமியும், ஓ.பி.எஸ்-ஸும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்கட்டும். யார் வெற்றி பெறுவார்கள் என பார்ப்போம்.
 
பேருந்து கட்டண உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சேலத்தில் இருந்து கோவைக்கு 1000 பேருந்து வழித்தடங்களை சில முக்கிய அமைச்சர்களுக்கு கொடுத்த பின்னரே பேருந்து கட்டண உயர்வு அமுல்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், சில தனியார் பேருந்து நிறுவன உரிமையாளர்களிடம் பெட்டி வாங்கியுள்ளனர் என அவர் பேசினார்.