1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : புதன், 1 ஏப்ரல் 2015 (17:23 IST)

கொம்பன் பட விவகாரம்: திரைத்துறைக்கு தொடரும் ஆபத்துகளைச் சகித்துக்கொள்ள முடியாது- சீமான் அறிக்கை

திரைத்துறைக்கு அடுத்தடுத்து நிலவும் இத்தகைய ஆபத்துகளைச் சகித்துக் கொண்டு இருக்க முடியாது என்று கொம்பன் பட பிரச்சனை குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்ட தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
 
கொம்பன் படப் பிரச்சனை குறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், சீமான் கூறியிருப்பதாவது:
 
கொம்பன் படத்தில் சாதிய சீண்டல்கள் இருப்பதாக மருத்துவர் கிருஷ்ணசாமி கிளப்பிய புகாருக்குப் படம் பார்த்த நடுநிலையாளர்கள் உரிய நம்பிக்கையைப் பதிலாகச் சொல்லி இருக்கிறார்கள். நடிகர் சங்கத்தின் தலைவர் திரு.சரத்குமார், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் அண்ணன் திரு.கலைப்புலி தாணு, இயக்குநர்கள் சங்கத் தலைவர் திரு.விக்கிரமன் உள்ளிட்டோர் நேற்று கொம்பன் படத்தை முழுதாகப் பார்த்து, படத்தில் சாதிய மோதலுக்கான எந்த அறிகுறியும் இல்லை எனச் சொல்லியிருக்கிறார்கள்.
 
நிறைய படங்களை இயக்கியவரும் சமூக அக்கறை கொண்டவருமான இயக்குநர் திரு.விக்கிரமன், ''கொம்பன் படத்தில் சாதி மற்றும் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் இருப்பதாக யாராவது நிரூபித்தால், நான் இனிமேல் படம் எடுப்பதையே நிறுத்தி விடுகிறேன்" எனச் சொல்லியிருக்கிறார். இத்தகைய நம்பகமான கருத்துகளுக்குப் பிறகாவது அண்ணன் கிருஷ்ணசாமி கொம்பன் படத்துக்கான எதிர்ப்பைக் கைவிட வேண்டும். ஆனால், இப்போதும் 'கொம்பன் படம் வெளியானால் சாதிய மோதல்கள் உருவாகும்' என அண்ணன் கிருஷ்ணசாமி திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பது, தேவையற்ற பதற்றத்தை உருவாக்கிவிட வாய்ப்பிருக்கிறது.

'கொம்பன் படத்தில் சாதிய பிரச்சனை' எனப் பேசிக்கொண்டே இருந்தால், அது உண்மையான சாதியப் பிரச்சனையாகவே மாறிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் மரியாதைக்குரிய தலைவராக இருக்கும் அண்ணன் கிருஷ்ணசாமி, இத்தகைய அபாயத்தை உணராமல் ஒரு திரைப்படத்துக்கு எதிராகக் கொடிபிடித்துக் கொண்டு இருக்கக்கூடாது. திரைத்துறைக்கு அடுத்தடுத்து நிலவும் இத்தகைய ஆபத்துகளைச் சகித்துக் கொண்டு இருக்க முடியாது.
 
படத்தில் இடம் பெற்றிருந்த சர்ச்சைக்குரிய அத்தனை காட்சிகளையும் வசனங்களையும் தணிக்கைத்துறை நீக்கி இருக்கிறது. அண்ணன் கிருஷ்ணசாமியின் மன உணர்வுக்கு மதிப்பளித்து தணிக்கைத்துறையும் சம்பந்தப்பட்ட படத்தின் தயாரிப்பு தரப்பும் மிகுந்த கவனத்தோடு படத்தை சரி செய்திருக்கிறார்கள். இன்று படம் வெளியாக இருக்கும் நிலையில், அண்ணன் கிருஷ்ணசாமி அவர்களே படத்தை நேரடியாகப் பார்த்து அதன் உண்மைத்தன்மையை அறிய வாய்ப்பிருக்கிறது. 
 
இதற்கிடையில் கொம்பன் வெளியீட்டுக்கும் 'நண்பேண்டா' வெளியீட்டுக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை என நண்பேண்டா படக்குழுவினரே என்னைத் தொடர்புகொண்டு பேசினார்கள். திரைத்துறை எத்தகைய மோதலோடும் இல்லாமல் கலைப்பணி ஆற்றும் களமாக இருக்க வேண்டும் என்பதையே நாம் தமிழர் கட்சி விரும்புகிறது. எனவே பெருமதிப்புமிக்க மருத்துவர் கிருஷ்ணசாமி அவர்கள் கொம்பன் பிரச்சனையை மேற்கொண்டும் பெரிதாக்காமல், அமைதிகாக்க வேண்டும். திரைத்துறையில் பணியாற்றும் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட  தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் அண்ணன் கிருஷ்ணசாமி நினைத்துப் பார்க்க வேண்டும். மிகுந்த பொருளாதார பிரச்சனைகளுக்கு மத்தியில் உருவாகும் திரைப்படங்கள் இத்தகைய நெருக்கடிகளுக்கு ஆளாகும் போது அது திரைத்துறையையே நலிந்து போக வைத்துவிடும்.
 
தமிழ்த்திரைத்துறையைக் காக்க வேண்டிய கடமை ஒரு தமிழராக அண்ணன் கிருஷ்ணசாமிக்கும் இருக்கிறது என்பதை மிகுந்த அன்போடு நாம் தமிழர் கட்சி சொல்லிக்கொள்கிறது என்று அந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.