1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 22 டிசம்பர் 2021 (12:42 IST)

அதிகார திமிரில் ஆடும் திமுகவினர்: சீமான் கடும் கண்டனம்!

அதிகாரத் திமிரில் அரசியல் அநாகரீகத்தை அரங்கேற்றும் திமுகவினரின் செயல் வெட்கக்கேடானது என சீமான் கடும் கண்டனம். 

 
நாம் தமிழர் கட்சியின் பேச்சாளர் ஒருவர் மேடையில் பேசிக் கொண்டிருந்த போது அவரை மேடை ஏறி திமுக தொண்டர் ஒருவர் அடிக்க சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் திமுக தொண்டரை அப்புறப்படுத்தி பேச்சாளரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். 
 
இந்நிலையில் இதற்கு சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, தருமபுரி மாவட்டம், அரூரில் இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலைகோரி நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுகவின் வன்முறைக்கும்பல் அத்துமீறி உள்நுழைந்து, மேடையை உடைத்து, கட்சியின் நிர்வாகிகள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் கொலைவெறித்தாக்குதல் நடத்த முற்பட்டதும், அதனைக் காவல்துறையினர் கைகட்டி நின்று வேடிக்கைப் பார்த்ததும் கடும் கண்டனத்திற்குரியது.
 
கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்று, வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் திமுகவினரின் இப்போக்கு கோழைத்தனத்தின் உச்சம். வடமாநிலங்களில் பாஜக செய்யும் அதேவகையிலான வன்முறையையும், சனநாயகத்திற்கு எதிரானக் கொடுங்கோல் போக்கையும் ஏவிவிடும் திமுகவினரின் செயல் இழிவானது. அதிகாரத்திமிரிலும், ஆட்சி தந்த மமதையாலும் காவல்துறையைக் கைவசம் வைத்துக்கொண்டு அரசியல் அநாகரீகத்தை அரங்கேற்றும் திமுகவினரின் செயல் வெட்கக்கேடானது.
 
நாம் தமிழர் கட்சியின் மேடையை உடைத்து, கட்சியின் நிர்வாகிகள் மீது வன்முறை வெறியாட்டத்தை ஏவிவிட்ட திமுகவினரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.