வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 22 ஆகஸ்ட் 2014 (11:26 IST)

ஆள் இல்லா மின்சார ரயில் பெட்டிகளில் பெண்கள் பயணிக்க வேண்டாம்: தெற்கு ரயில்வே வேண்டுகோள்

ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்காக 10 புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
 
இதுகுறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
 
திருத்தணி - அரக்கோணம் இடையே செல்லும் மின்சார ரயிலில் கடந்த 19 ஆம் தேதி(செவ்வாய்க்கிழமை) கொள்ளைச்சம்பவம் நடந்தது. இதையடுத்து மின்சார ரயில்களில் இனி எவ்வித திருட்டும், கொள்ளைச்சம்பவங்களும் நடைபெறாத வகையில் தற்போது இருக்கும் நிலையை காட்டிலும் ரயில்வே பாதுகாப்புப்படை பலப்படுத்தப்பட இருக்கிறது.
 
சமூக விரோத செயல்கள் நடைபெறாத வகையிலும், பயணிகளின் பாதுகாப்பு கருதியும் ரயில்வே பாதுகாப்புப்படை சார்பில் 10 பாதுகாப்பு அம்சங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. அவை பின்வருமாறு:-
 
எல்லா நாட்களிலும் இரவு நேரங்களில் அரக்கோணம் - திருத்தணி ரயில்களில், ரயில்வே பாதுகாப்புப்படை சார்பில் கடும் பாதுகாப்பு போடப்படும் 
 
தினந்தோறும், 24 மணி நேரமும் திருத்தணி ரயில் நிலையத்தில் 2 அல்லது 3 ரயில்வே பாதுகாப்பு படையினர் நிரந்தரமாக நிறுத்தப்பட்டு, சந்தேகத்துக்குரிய நபர்களை கண்காணிப்பார்கள். மேலும், மகளிர் பெட்டிகளில் வேறு யாராவது ஏறுகிறார்களா? என்றும் கண்காணிப்பார்கள். 
 
ஒரு பாதுகாப்புப்படை சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் சிறப்பு குழுவினர் மூலம் ரயில் நிலையங்களில் அடிக்கடி சோதனை நடத்தப்படும். மேலும், சந்தேகத்துக்குரிய நபர்கள், உரிய டிக்கெட் இன்றி வருபவர்களை கண்காணித்து, அவர்களிடம் விசாரணையும் மேற்கொள்ளப்படும். 
 
வெளி நிலையங்களில் பணியில் இருக்கும் பாதுகாப்புப்படையினர் கூடுதலாக அரக்கோணம் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். 
 
அரக்கோணம் - திருத்தணி வரையிலான ரயில் நிலையங்களில் போடப்பட்டு இருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை, திருத்தணியில் தங்கியிருந்து ஒரு உதவி பாதுகாப்பு கமிஷனர் பார்வையிட்டு, ஆலோசனை வழங்கி வழிநடத்துவார்.
 
ரயில் நிலையங்களில் எல்லா இடங்களிலும் பாதுகாப்புக்காக ரயில்வே பாதுகாப்புப்படையினர் நிறுத்தப்படுவார்கள். எல்லா ரயில் பெட்டிகளிலும் பாதுகாப்புப்படை வீரர்கள் பயணிகளுடனே (மகளிர் பெட்டிகளில் முக்கியமாக) பாதுகாப்புக்காக செல்வார்கள்.
 
பயணிகளின் பாதுகாப்பிற்காக ஒலி எழுப்பக்கூடிய கருவிகள் ரயில் நிலையங்களில் பெரும்பாலான இடங்களில் பொறுத்தப்படும். இந்த கருவிகள் குறித்தும், அதனை செயல்படுத்தும் விதம் குறித்தும் பயணிகளுக்கு விழிப்புணர்வு பிரசாரம் மூலம் தெரியப்படுத்தப்படும். இதன்மூலம் பயணிகள் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும். 
 
சிறப்பு கொள்ளைத்தடுப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டு, ரயில் நிலையங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும்.
 
மின்சார ரயில்களில் உள்ள எல்லா மகளிர் பெட்டிகளிலும் பாதுகாப்பு தர இயலாத சூழ்நிலையால், மின்சார ரயில்களில் உள்ள ஆள் இல்லா ரயில் பெட்டிகளில் குறிப்பாக இரவு நேரங்களில் பெண் பயணிகள் பயணிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. 
 
ஆபத்து கால நேரங்களில் போன் செய்தோ அல்லது எஸ்.எம்.எஸ்.(குறுந்தகவல்) சேவையை பயன்படுத்தி ரயில்வே பாதுகாப்புப்படையினரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மகளிர் பாதுகாப்புப்படையினரை 1322 அல்லது 044-25353999 என்ற எண்களிலும், ரயில்வே பாதுகாப்புப்படையினரை 9003161710 என்ற எண்ணிலும், ரயில்வே போலீசாரை 9962500500 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.