போதையில் தேர்தல் பணிக்கு வந்த ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்
குடிபோதையில் தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு வந்த தேர்தல் அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பரமக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பணியில் ஈடுபட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இறுதிக் கட்ட பயிற்சி மே 12ஆம் தேதி பரமக்குடியில் நடைபெற்றது.
பயிற்சி வகுப்பின் போது, மல்லனூர் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய ஜான்தாமஸ், தேளுர் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய தர்மராஜ், ஓரிக்கோட்டையிலுள்ள செயின்ட் மேரீஸ் நடுநிலைப்பள்ளியில் பணியாற்றிய ராஜா ஆகியோர் மது அருந்திவிட்டு பயிற்சி வகுப்பிற்கு வந்ததோடு, பயிற்சி வகுப்பை நடத்த விடாமலும், பிற அலுவலர்களை பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விடாமலும் இடையூறு செய்துள்ளனர்.
இவர்கள் மீது பரமக்குடி சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் ஜி.எஸ்.சமீரன் சம்பந்தப்பட்ட மூன்று அலுவலர்கள் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள கல்வித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி, மூன்று அலுவலர்கள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, பரமக்குடி நகர காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் இது சம்பந்தமாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை. இந்தத் தகவலை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.