வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 14 அக்டோபர் 2019 (13:25 IST)

புகாரைத் திரும்பப் பெற சொல்லி மிரட்டல்… மருத்துவமனையிலும் அலட்சியம் – சாதிக் கொடுமைக்கு ஆளான மாணவனின் நிலைமை !

மதுரையில் சாதியின் பெயரை சொல்லி சகமாணவன் ஒருவனை மாணவன் பிளேடால் முதுகில் வெட்டியுள்ள சம்பவத்தை அடுத்து புகாரைத் திரும்ப பெற சொல்லி பாதிக்கப்பட்ட மாணவனின் குடும்பத்துக்கு மிரட்டல்கள் வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மதுரை மாவட்டம் , அலங்காநல்லூர் ஒன்றியம், பாலமேடு அருகே மறவப்பட்டி காலனி சேர்ந்த தலித் மாணவன் சரவணகுமார், பாலமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். 11.10.2019 இன்று மாலை சரவணகுமார் உடன் படிக்கும் மாணவன் மோகன்ராஜ் பள்ளி பையை மகா ஈஸ்வரன் என்ற மாணவன் எடுத்து மறைத்து வைத்துக் கொண்டு தேட வைத்துள்ளனர்.

இதை சரவணகுமார் மற்றும் மோகன்ராஜ் மேற்படி மகேஸ்வரனிடம் கேட்டுள்ளனர், இதனால் ஆத்திரமடைந்த மகா ஈஸ்வரன், சரவணகுமாரை பார்த்து ஏண்டா நீயெல்லாம் என்னை எதிர்த்து பேசுவியா என்று கூறியதும் மட்டுமல்லாமல் சாதிப்பெயரை சொல்லி தகாத வார்த்தைகளிலும் பேசி டப்பாவில் வைத்திருந்தா பிளேடால் சரவணகுமாரின் முதுகில் கிழித்துள்ளான்.

தாக்கப்பட்ட மாணவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். ஆனால் மருத்துவமனையில் அவருக்கு முறையான படுக்கை வசதிக் கொடுக்காமல் தரையில் பாய் விரித்து படுக்க வைத்துள்ளதாக புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் பிளேடால் வெட்டிய மாணவனின் பெற்றோர் புகாரைத் திரும்ப பெற சொல்லி சரவணக்குமாரின் பெற்றோரை மிரட்டுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு நீதி கிடைக்க அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென சமூக வலைதளங்களில் குரல்கள் எழுந்துள்ளன.