1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : ஞாயிறு, 28 ஜூன் 2015 (06:10 IST)

நெல் கொள்முதல் நிலையங்களில் பல கோடி ரூபாய் நூதன முறைகேடு: விஜயகாந்த் குற்றச்சாட்டு

நெல் கொள்முதல் நிலையங்களில் பல கோடி ரூபாய் அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
 
இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
இந்தியாவில் உள்ள விவசாயிகளை ஏழ்மையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில்தான் இந்தியா முழுவதும் நெல் மற்றும் கோதுமையை மத்திய, மாநில அரசுகள் கொள்முதல் செய்து வருகின்றன.
 
தமிழகத்தில் நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. நெல் கொள்முதல் ஆதார விலையாக பொதுரக நெல்லுக்கு ரூ.1,400ம், சன்னரக நெல்லுக்கு ரூ.1,470ம் வழங்குவதாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
 
ஆனால், அரசு கொள்முதல் நிலையங்கள் சில இந்த விலையை நிர்ணயம் செய்வதால், விவசாயிகள் தனியார் வியாபாரிகளிடம் நெல்லை விற்பனை செய்து வருகின்றனர்.
 
தமிழகத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் மிகக் குறைந்த அளவே நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இதை மூடி மறைக்கும் வகையில், நூதன வழியில் மோசடி நடவடிக்கையில் நெல் கொள்முதல் நிலையங்கள் ஈடுபட்டு வருகின்றன.
 
ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து மிகவும் தரம் குறைந்த நெல்லை, ஒரு குவிண்டால் ரூ.750 முதல் ரூ.1,000 வரை என மிகக் குறைவான விலை கொடுத்து இடைத்தரகர்கள் மூலம் வாங்குகின்றனர்.
 
அவ்வாறு, வாங்கும் நெல்லை உள்ளூர் விவசாயிகளின் பெயரில் பதிவு செய்து, முறைகேடு செய்கின்றனர்.  இதன் மூலம் குவிண்டாலுக்கு ரூ.600 வரை மோசடி நடைபெறுகிறது.
 
இது போன்ற மோசடிகளில் , தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ஈரோடு போன்ற பல மாவட்டங்களில் பல கோடி ரூபாய் நடைபெற்றுள்ளது.
 
எனவே, இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்வர்கள் மீது தமிழக அரசு உனே விசாரணை செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.