செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (17:38 IST)

பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறாரா சசிகலா?

தனது பதவி குறித்து சர்ச்சை எழுந்ததாலும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாலும் தனது பொருளாலர் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


 

 
அதிமுகவின் சட்ட விதிகளின் படி கட்சியில் சேர்ந்து 5 வருடங்கள் தொடர்ந்து உறுப்பினராக இருந்த ஒருவர் தான் பொதுச்செயலாளராக முடியும். அதே நேரத்தில் பொதுச்செயலாளரை பொதுக்குழு மற்றும் அதிமுக தொண்டர்களால் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். 
 
தற்காலிக பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான வழிமுறையே அதிமுக விதிகளில் இல்லை. ஆனால் இதனை எல்லாம் மீறி அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். எனவே இதனை எதிர்த்து மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தார். ஆனால், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 
 
இந்நிலையில் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள ஓபிஎஸ் அணியினரும் சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டது. இதனையடுத்து தேர்தல் ஆணையம் இது தொடர்பாக விளக்கம் அளிக்க சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. பிப்ரவரி 28-ஆம் தேதி அதாவது இன்றுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது. 
 
அதன்படி டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்திடம் சசிகலா தரப்பு பதில் விளக்கத்தை அவரது வழக்கறிஞர் இன்று தாக்கல் செய்தார். அதில் தான் உரிய விதிமுறைகளின்படிதான் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதாக சசிகலா விளக்கம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.
 
இன்று பெங்களூர் சென்று சசிகலாவை சந்தித்த செங்கோட்டையன், காமராஜ், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜீ ஆகிய அமைச்சர்களிடம் பொதுச் செயலாளர் பதவி, சிறை மாற்றம், சொத்துக்குவிப்பு வழக்கில் சீராய்வு மனு, ஓ.பி.எஸ் மற்றும் தீபாவின் அரசியல் நடவடிக்கைகள், தீபக் மனமாற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
 
ஆனாலும், 2011ம் ஆண்டு ஜெ. தன்னை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டதால்,  தொடர்ந்து 5 வருடம் கட்சியில் இல்லாததை, தேர்தல் கமிஷன் குறிப்பிட்டுக் காட்டும் என்பதை உணர்ந்த சசிகலா, தனது பொருளாலர் பதவியியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக, டி.டி.வி. தினகரன் மற்றும் அமைச்சர்களுடன் அவர் விவாதித்ததாக கூறப்படுகிறது. 
 
விரைவில் சசிகலாவின் ராஜினாமா குறித்து அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.