ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 29 ஜூலை 2023 (13:18 IST)

பட்டாசு தயாரிக்கும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: சசிகலா

பட்டாசு தயாரிக்கும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சசிகலா கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
கிருஷ்ணகிரியில் பழையபேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 8 நபர்கள் உயிரிழந்திருப்பதாகவும் 3 வீடுகள் இடிந்து தரைமட்டமாகியிருப்பதாகவும், 10க்கு மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும் வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கின்றன. மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று தொலைக்காட்சிகளில் செய்திகள் வருவது கூடுதல் கவலையை அளிக்கிறது.
 
தமிழ்நாட்டில் பட்டாசு தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள், குடோன்கள் ஆகியவற்றில் விபத்து ஏற்பட்டு அதில் ஏழை எளிய சாமானிய தொழிலாளர்கள் உயிரிழப்பது தொடர்ந்து நடந்து வருவது கவலையை அளிக்கிறது. திமுக தலைமையிலான அரசு இது போன்ற உயிரிழப்புகளை தடுக்க எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருவது மிகவும் கணடனத்திற்குரியது. பட்டாசு தொழில் நிறுவனங்கள் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்கின்றனவா? என்பது குறித்து தமிழக அரசு தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளவேண்டும். தமிழக அரசு அவ்வாறு முறையான ஆய்வுகளையும், கண்காணிப்புகளையும் சரிவர செய்து இருந்தால் இன்றைக்கு இந்த விபத்து ஏற்பட்டு இத்தனை உயிர்களை இழந்து இருக்க மாட்டோம். திமுக தலைமையிலான அரசின் அலட்சியப்போக்கினால், மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் தூக்கத்தில் இருப்பதா லும்தான் எந்த பணிகளையும் சரியாக செய்ய முடியாமல் தமிழக மக்கள் பாதிப்படைந்து வருகிறார்கள். எனவே திமுக அரசு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து தமிழக மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முன் வர வேண்டும்.
 
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். கட்டிட இடிபாடுகளில் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா? என்பதை கண்டறிந்து அவர்களையும் விரைந்து மீட்க வேண்டும். மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்கள் விரைவில் பூரணமாக குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன். திமுக தலைமையிலான அரசு உடனடியாக அரசு அலுவலர்கள் அடங்கிய குழுவை நியமித்து தமிழகத்தில் உள்ள அனைத்து பட்டாசு தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள், குடோன்கள் ஆகியவற்றில் முறையான ஆய்வுகளை மேற்கொண்டு இத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஏழை எளிய சாமானிய தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
 
Edited by Mahendran