வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 6 ஜனவரி 2017 (14:06 IST)

முதலமைச்சர் பொறுப்பேற்க சசிகலா அவசரம்: சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு காரணமா?

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு விரைவில் வழங்கப்பட உள்ளதால் அதற்கு முன்னதாக சசிகலா முதலமைச்சராக பொறுப்பேற்க அவசரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.


 

வருமானத்திற்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பு குறித்தான மேல்முறையீட்டில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் வழங்கப்பட்ட தண்டனையை கர்நாடக உயர்நீதிமன்றத் தனி நீதிபதி குமாரசாமி, முழுமையாக ரத்து செய்தார்.

ஜெயலலிதாவின் சொத்து மதிப்பை குறைத்துக் கணக்கிட்டும், அரைகுறையாக விசாரணை நடத்தியும் நீதிபதி குமாரசாமி இந்த தீர்ப்பை வழங்கியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் கர்நாடக அரசு ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், சுப்பிரமணியசாமி ஆகியோர் தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில், முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, திடீர் மரணம் அடைந்ததால், மீதமுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தீர்ப்பு வழங்கப்படும். இவ்வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாகலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில், அதிமுக உள்கட்சி விவகாரத்தில் மத்திய பாஜக அரசு தலையிடுவதாகவும் கருதப்படுகிறது. சேகர் ரெட்டி, ராம மோகன் ராவ் உள்ளிட்டோர் இல்லங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை ரெய்டு, முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் - பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு, வெங்கைய்யா நாயுடு பன்னீர்செல்வத்திற்கே மத்திய அரசின் ஆதரவு என அறிவித்தை எல்லாம் பார்க்கையில் பாஜகவின் நிலைப்பாடு தெளிவாகிறது.

இந்நிலையில், தமிழக முதலமைச்சராக சசிகலா பதவியேற்றால் அதிகாரம் அவரது கைக்கு வரும். அவ்வாறு அதிகாரத்தில் அமரும் பட்சத்தில் தனக்கு எதிராக அவ்வளவு எளிதில் தீர்ப்பு வந்துவிடாது என்று சசிகலா கருதுவதாக தெரிகிறது. இதனால், சசிகலா விரைவில் தமிழக முதலமைச்சராக பதவியேற்பார் என்று தெரிகிறது.