வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (19:18 IST)

சசிகலா 4 ஆண்டுகள் உட்பட 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது!

1991-1996 ஆம் ஆண்டில் முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட  வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி, ஜெயலலிதா  சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சிறை தண்டனை விதித்தார்.

 
இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்ற மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த தனிநீதிபதி குமாரசாமி  அனைவரையும் விடுதலை செய்தார்.
 
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை நீதிபதிகள் பினாக்கி கோஷ்,  அமித்வா ராய் பெஞ்ச் விசாரித்து தீர்ப்பை ஒத்தி வைத்தது. இவ்வழக்கின் தீர்ப்பை விரைந்து வழங்க கடந்த வாரம் கர்நாடகா  அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வலியுறுத்தி இருந்தார். அப்போது இன்னும் ஒருவாரத்தில் தீர்ப்பு  வழங்கப்படும் என நீதிபதி பினாக்கி கோஷ் தெரிவித்திருந்தார்.
 
இதனிடையே இன்று (பிப்ரவரி 14) இந்த வழக்கில் தீர்ப்பு வெளியானது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ்,  அமித்தவராய் இன்று தீர்ப்பளித்தனர். அப்போது, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர்  குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. மேலும், மூன்று பேரும் நான்கு வாரத்தில் பெங்களூரு  சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
 
மேலும் தண்டனை காலம் 4 ஆண்டுகள் உட்பட 10 ஆண்டுகள் சசிகலா தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் தெரிவித்துள்ளது.