வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 8 நவம்பர் 2018 (19:39 IST)

சர்கார்' படத்தில் எந்தெந்த காட்சிகள் நீக்கம்? புதிய தகவல்

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' படத்திற்கு எதிரான கருத்துக்களை அதிமுக அமைச்சர்கள் தெரிவித்தபோது, இந்த படத்திற்கு அவர்கள் இலவச விளம்பரம் செய்வதாக எண்ணி படக்குழு முதலில் அந்த எதிர்ப்பை கண்டுகொள்ளவில்லை. ஆனால் திரையரங்குகளுக்கு முன் ஆர்ப்பாட்டம், பேனர் கிழிப்பு, திரையரங்குகளில் அரசு அதிகாரிகள் ஆய்வு, காட்சிகள் ரத்து என அடுத்தடுத்து எதிர்ப்புகள் வெவ்வேறு வடிவங்களில் வந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து அதிமுக போராட்டத்திற்கு பணிந்து, சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பு தரப்பு முன்வந்துள்ளது. இந்த காட்சிகளை நீக்க விஜய், மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர்களிடம் ஆலோசனை செய்யாமல் தயாரிப்பு தரப்பே முடிவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்கார்' படத்தில் கோமளவல்லி என்ற வசனம் மியூட் செய்யப்படுவதாகவும், இலவச பொருட்களை தீயில் போடும் காட்சிகள் நீக்கப்படுவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு சென்சாரின் அனுமதி பெற்று நாளை முதல் 'சர்கார்' புதுப்பொலிவுடன் திரையிடப்படும் என்றும் தகவல் வெளிவந்துள்ளது. இனிமேலாவது அதிமுகவினர் சமாதானம் அடைந்து படத்தை திரையிட ஒத்துழைப்பு கொடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்