1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Updated : சனி, 11 நவம்பர் 2017 (14:02 IST)

செய்தியாளர்களை தாக்கிய மணல் கொள்ளையர்கள்

கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டாட்சியர் தூண்டுதலின் பேரில் மணல் கொள்ளையர்கள் செய்தியாளர்களை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


 


கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுக்காவிற்கு உட்பட்ட பெரிய வடுகபட்டி வழியாக மணல் லாரிகளில் திருட்டுதனமாக மணல் அள்ளிக் கொண்டு இரவு நேரங்களில் ஒரு சில மணல் லாரிகள் சென்று வந்துள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் அடிக்கடி பிரச்சினை செய்து வந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 9 லாரிகள் ஒரே நேரத்தில் கிராமத்தை கடந்து செல்ல முயன்ற போது கிராம மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு மணல் லாரிகளை சிறை பிடித்தனர். சுமார் இரண்டரை மணிநேரத்திற்கு பிறகு அங்கு வந்த மண்மங்கலம் வட்டாட்சியர் ராம்குமார் பேச்சுவார்த்தை நடத்த முயன்றார்.

அப்போது மணல் லாரி ஓட்டுநர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதுடன், மணல் லாரி ஓட்டுநர்களை பொதுமக்கள் தாக்கினர். இதுகுறித்து செய்தி சேகரித்துக் கொண்டிருந்த கலைஞர் டிவி செய்தியாளர் தண்டபாணியை மணல் கொள்ளையர்கள் தாக்கினர்.

தாசில்தார் ராம்குமார் உதவியுடன் மணல் கொள்ளையர்கள் செய்தியாளர்கள் மீது நடத்திய தாக்குதலை தாசில்தார் ராம்குமார் வேடிக்கை பார்த்தபடியே இருந்ததற்கு சமூக நல ஆர்வலர்கள் மற்றும் மூத்தபத்திரிக்கையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி நேரடியாக களத்தில் இறங்கியதோடு, மணல் லாரிகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு மணல் லாரிகளை எடுத்துச்  சென்றனர்.