1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 4 பிப்ரவரி 2016 (17:01 IST)

செய்தியாளரை தாக்கி செல்போனை பிடிங்கிய சேலம் கலெக்டர்

ஒரு செய்தியாளரின் செல்போனை பிடிங்கிய சேலம் கலெக்டர் சம்பத், அதை திருப்பி தராமலேயே சென்று விட்ட சம்பவம் சேலத்தின் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
“மாண்புமிகு அம்மாவின் ஆணைக்கிணங்க சேலத்தில் கனமழை பெய்தது” என்று பேசி சர்ச்சையில் சிக்கியவர் சேலம் கலெக்டர் சம்பத். தற்போது அடுத்த சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
 
கடந்த 3ஆம் தேதி, சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு சென்ற சம்பத், தனது பொலிரோ ஜீப்பை பொதுப்பணித்துறை பயணியர் மாளிகையில் நிறுத்திவிட்டு, அந்த ஊரில் இருக்கும் விஸ்வநாத் என்ற தியேட்டருக்கு இறுதிச்சுற்று படம் பார்க்க சென்றுள்ளார். அவருடன் ஆத்தூர் நகராட்சி ஆணையர் இராமகிருஷ்ணனும் சென்றுள்ளார். 
 
இந்த தகவலை தெரிந்து கொண்ட காலைக்கதிர் நிருபர் ஒருவரும் தியேட்டருக்கு சென்றுள்ளார். படம் முடிந்து சில பேருடன் சம்பத் வெளியே வந்தபோது, அந்த நிருபரை அடையாளம் கண்டுகொண்ட நகராட்சி ஆணையர் ராமகிருஷ்ணன், இவன்தான் காலைக்கதிர் நிருபர் என்று கலெக்டரிடம் கூறியுள்ளார்.
 
அவரைப் பார்த்து கோபமடைந்த கலெக்டர் சம்பத், அவர் எங்கே தன்னை படம் பிடித்து செய்தி பத்திரிக்கையில் போட்டு விடுவாரோ என்று பயந்து, செய்தியாளரிடம் இருந்த செல்போனை பிடங்க கூறியுள்ளார். 
 
ஆனால், அந்த செய்தியாளர் செல்போனை கொடுக்க மறுத்துள்ளார். சம்பத்துடன் வந்தவர்கள் அவரிடம் செல்போனை கேட்டுக் கொண்டிருக்கும் போதே, கலெக்டர் சம்பத் செய்தியாளரை தாக்கி செல்போனை பிடிங்கிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார். ஆனால் அந்த நிருபரோ விடாமல் கலெக்டரின் வண்டியின் பின்னால் ஓடியுள்ளார்.
 
அதன்பின், வேறு சில பத்திரிக்கையாளர்கள் அங்கு வந்து அவரை மோட்டர் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு சம்பத்தின் வண்டியை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். நரசிங்கபுரம் எனும் ஊர் அருகில் கலெக்டரின் காரை மறித்த செல்போனை கேட்டுள்ளனர்.
 
ஆனால் சம்பத்தின் டிரைவர் “செல்போனை தியேட்டரிலேயே கொடுத்து விட்டோம்” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். ஆனால் அவர்கள் தியேட்டருக்கு போய் விசாரித்த போது யாரிடம் செல்போன் கொடுக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
 
தலையில் அடிபட்ட அந்த பத்திரிக்கையாளர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார். மேலும் இது பற்றி காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்துள்ளார். அதே சமயம் தன்னிடம் தகராறு செய்ததாக கலெக்டர் சார்பில், அந்த செய்தியாளர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
 
சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத்தின் இந்த செயலை கண்டித்து, சேலம் மற்றும் ஆத்தூரில் இன்று காலை பத்திரிக்கையாளர் அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.