1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 8 நவம்பர் 2019 (10:41 IST)

பள்ளி மாணவர்களுக்கு அழுகிய முட்டை – திருப்பத்தூரில் சத்துணவு அதிகாரிகள் அலட்சியம் !

திருப்பத்தூர் அருகே உள்ள தாதுவள்ளி அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முட்டை அழுகிய நிலையில் இருந்தது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் இலவச முட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட தாதுவள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று மாணவ மாணவிகளுக்கு வழக்கம் போல முட்டை வழங்கப்பட்டுள்ளது.

அந்த முட்டைகளில் பாதிக்கும் மேலானவை அழுகிய நிலையில் இருந்துள்ளன. இதுபற்றி தகவல் அறிந்த பெற்றோர் அங்கு கூடி சத்துணவு அதிகாரிகளிடம் கேட்க அவர்கள் பொறுப்பற்ற முறையில் பதில் சொல்லியுள்ளனர். இதனால் அவர்கள் பள்ளியின் முன்பு கூடி தலைமையாசிரியரிடம் முறையிட அங்கே பரபரப்பான சூழல் உருவானது.

இந்த தகவல் திருப்பத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் நலங்கிள்ளிக்கு செல்ல அவர் அங்கு வந்து விசாரணை நடத்தினார். பின்னர் அழுகிய முட்டைகளுக்குப் பதிலாக நல்ல முட்டைகளை சமைத்துக் கொடுக்க சொன்னார். இனி இதுபோல நடக்காது என பெற்றோர்களுக்கு உறுதியளித்த பின் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.