1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: வியாழன், 18 டிசம்பர் 2014 (13:07 IST)

இந்தியாவில் 2013 ஆம் ஆண்டு 4 லட்சத்து 517 சாலை விபத்துகள் நடந்ததாக திடுக்கிடும் தகவல்

2013 ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் நடைபெற்ற 4 லட்சத்து 517 சாலை விபத்துக்கள் நிகழ்ந்துள்ளது என கும்மிடிப்பூண்டியில் புதன்கிழமை நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமில் தெரிவிக்கப்பட்டது.
 
கும்மிடிப்பூண்டி பஜாரில் செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் திருமலா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சார்பாக சாலை விழிப்புணர்வு முகாம் சாலை போக்குவரத்து அலுவலர் சம்பத்குமார் குமார் தலைமையில் நடைபெற்றது. நிகழ்விற்கு திருமலா மோட்டார்ஸ் நிறுவனத் தலைவர் சரவணன், எம்.எஸ்.எஸ்.வேலு முன்னிலை வகித்தனர்.
 
தொடர்ந்து செங்குன்றம் மோட்டார் வாகன ஆய்வாளர் நெடுமாறன், கும்மிடிப்பூண்டி மோட்டார் வாகன ஆய்வாளர் ரமேஷ், கும்மிடிப்பூண்டியில் உள்ள அரசு வாகன ஓட்டுனர் பயிற்சியகத்தின் உதவி இயக்குனர் பாண்டியன், ஓட்டுனர் பயிற்சி பள்ளி ஆசிரியர் மணிகண்டன் கலந்துக் கொண்டு சாலை விபத்துகள் அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்து எடுத்துக் கூறினர்.
 
அதில் பெரும்பாலான விபத்துகள் சாலை விதிகளை மதிக்காததாலும், மது அருந்தியும், கவனக்குறைவுடனும், அதிவேகத்துடன் ஓட்டுவதாலேயே நடக்கிறது என்றும் இத்தகைய
 
விபத்தினால் தனிமனிதனுடைய உயிர் இழப்பு மட்டுமல்லாது அவனை சார்ந்துள்ள குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக பேரிழப்பும், அவனது குடும்ப சூழலை மாற்றிப் போடும் நிலைமையும் ஏற்படுகிறது என்றனர்.
 
மேலும் இந்தியாவில் மட்டும் 2013ஆம் ஆண்டு 4 லட்சத்து 517 சாலை விபத்துக்களில் 1 லட்சத்து 37 ஆயிரம் பேர் மரணமடைந்துள்ளனர் என்றும் இதில் 4 நிமிடங்களுக்கு ஒருவர் என்றும், 1 மணி நேரத்தில் 17 பேர் என்ற விகிதத்திலும் உயிரிழப்புகள் நிகழ்கிறது என்றும், இதற்கு காரணம் சாலை விதிகளை மதித்து நடக்காததே காரணம் என்றும் கூறியதோடு தமிழகத்தில் மட்டும் கடந்த ஆண்டு 15 ஆயிரத்து 563 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.
 
நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி சிவலிங்கம் பேசுகையில் இந்தியாவில் நகர சாலைகளில் வேக வரம்பு 40 கிலோமீட்டராகவும், குடியிருப்பு பகுதியில் 30 கிலோ மீட்டராகவும், தேசிய நெடுஞ்சாலையில் 80 கிலோமீட்டர் வரையிலும் , அதிவேக சாலையில் 100 கிலோ மீட்டர் வரையிலும் நிர்ணயிக்கப்பட்டாலும், இரு சக்கர வாகன ஓட்டிகளும், நான்கு சக்கர வாகன ஓட்டிகளும் இதனை மதிப்பதில்லை. குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் தலை கவசம் அணியாமலும், செல்போனில் பேசிக் கொண்டும், மது அருந்தியும் வாகனம் ஓட்டுவதாலேயே அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது என்ற நிலையில் வாகன ஓட்டிகள் அவர்களது உயிரையும், தனி மனிதனுடைய உயிரையும் நினைத்து கவனத்துடன் விதிகளுக்கு உட்பட்டு வாகனம் ஓட்டவேண்டும் என்றார்.
 
நிகழ்வில் கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் சேகர், சப் இன்ஸ்பெக்டர் ரஜின்காந்த் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர், நிகழ்வில் ஓட்டுனர் பயிற்சி மாணவர்கள், கும்மிடிப்பூண்டி பகுதி ஆட்டோ ஓட்டுனர்கள் என 200க்கும் மேற் கலந்துக் கொண்டனர். முடிவில் அனைவரும் சாலை பாதுகாப்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.