வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : திங்கள், 29 ஜூன் 2015 (08:51 IST)

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

வாக்குப் பதிவில் முறைகேடு நடந்திருப்பதால் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் என்ற பெயரில் மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது.
 
இந்த இடைத்தேர்தலில் குறைந்தது 1½ லட்சம் வாக்குகளில் வெற்றி பெற வேண்டும் என ஆளுங்கட்சி மேலிடம் ஆணையிட்டிருந்ததாகவும், அதை நிறைவேற்றும் வகையில் தான் ஆளுங்கட்சியினர் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி கள்ள வாக்குகளை பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. 
 
வாக்குப்பதிவு வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டதால் இந்த முறைகேடுகள் அனைத்தும் தேர்தல் ஆணையத்திற்கு தெரிந்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி இந்த முறைகேடுகள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் புகார் தெரிவித்தனர்.
 
ஆனால், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா இவற்றை எல்லாம் வேடிக்கைப் பார்த்தாரே தவிர முறைகேடுகளைத் தடுக்கவோ, முறைகேட்டாளர்களை பிடிக்கவோ நடவடிக்கை எடுக்கவில்லை.
 
எனவே, முறைகேடுகள் தலைவிரித்தாடிய ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, 2016 ஆம் சட்டமன்ற தேர்தல் நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவை நீக்கிவிட்டு நேர்மையான அதிகாரி ஒருவரை தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.