வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : ஞாயிறு, 21 ஜூன் 2015 (15:34 IST)

தேர்தல் ஆணையர் அதிமுகவின் மாவட்ட செயலாளர் போன்று செயல்பட்டு வருகிறார் - மு.க.ஸ்டாலின்

ஆர்.கே. நகர் தொகுதியில், தேர்தல் ஆணையர் அதிமுக வின் மாவட்ட செயலாளர் போன்று செயல்பட்டு வருகிறார் என்று திமுக பொருளாளர்  மு.க.ஸ்டாலின் குற்றம் சாற்றியுள்ளார்.
 
இது குறித்து மு.க.ஸ்டாலின் சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தவரையில் தேர்தல் ஆணையர் அதிமுக வின் மாவட்ட செயலாளர் போன்று செயல்பட்டு வருகிறார். இதற்கு பதில் சொல்லும் காலம் விரைவில் வரும்.
 
ஆர்.கே. நகர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்தவர் கடந்த 4 ஆண்டுகளாக அந்த தொகுதி மக்களுக்கு எந்த திட்டப்பணிகளையும் செய்யவில்லை.
 
அமைச்சர்கள் கூட அந்த தொகுதிக்கு செல்லவில்லை. ஆனால் ஜெயலலிதாவிற்காக அனைத்து அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் வாரிய தலைவர்களும் ஆர்.கே. நகர் தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
 
இதுதவிர காவல்துறையினரும், தேர்தல் ஆணையரும் அங்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றே கூறலாம்.
 
தேர்தல் விதிமுறைகள் மீறல் குறித்து டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் செய்ய முடிவு செய்துள்ளோம்.
 
சேலம் தனிக்குடிநீர் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. சேலம் தனிக்குடிநீர் திட்டம் மட்டுமின்றி திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் இந்த அதிமுக ஆட்சியாளர்களால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
 
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் ஆகியவை வேண்டும் என்றே அதிமுக ஆட்சியில் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மு.கஸ்டாலின் கூறினார்.