1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (14:03 IST)

டம்மி ஆக்கப்பட்ட திருப்புதல் தேர்வு: தேர்வுத்துறை அதிரடி!

10 மற்றும் 12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கு முக்கியத்துவம் கிடையாது என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 

 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் தற்போது தளர்வுகள் காரணமாக அன்றாடம் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வும் அறிவிக்கப்பட்டு நடந்து வருகிறது.
 
தேர்வுகள் நடந்து வரும் நிலையில் முன்னதாக 12 ஆம் வகுப்பு உயிரியல் பாட வினாத்தாள் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்று மீண்டும் வணிக கணிதம் பாடத்தின் வினாத்தாள் வெளியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
இதனிடையே நாளை 12 ஆம் வகுப்பு நடைபெற உள்ள இயற்பியல் பாடத்திற்கான வினாத்தாளும் தற்போது லீக் ஆனதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து வினாத்தாள்கள் லீக் ஆகி வரும் சம்பவம் பள்ளிகள், ஆசிரியர்கள், பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
 
இதனைத்தொடர்ந்து தேர்வுத்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தொடர்ந்து வினாத்தாள்கள் வெளியாகி வரும் நிலையில் 10,12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கு முக்கியத்துவம் கிடையாது என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 
 
திருப்புதல் தேர்வு மதிப்பெண் கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது, மாணவர்களை பொதுத்தேர்வு எழுத தயார்படுத்தவே திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.