நிவாரணத் தொகை - வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்..! என்எல்சியை கண்டித்து விவசாயிகள் முற்றுகை போராட்டம்..!
என்எல்சி சுரங்கம் 2 விரிவாக்க பணிக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு நிவாரண தொகை மற்றும் வேலை வாய்ப்பு வழங்க கோரி என்எல்சி நில எடுப்பு அலுவலகம் முன்பு விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இங்கு திறந்தவெளி சுரங்கங்கள் மூலம் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது
இந்நிலையில் சுரங்க 2 விரிவாக்க பணிக்காக என்.எல்.சி சுற்றியுள்ள கிராமமான , மும்முடி சோழகன், கம்மாபுரம்,கொளக்குடி, ஊ ஆதனூர் உள்ளிட்ட 5 கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் தங்களது வீடு மற்றும் நிலங்களை அளித்துள்ளனர்.
இவர்களுக்கு நிவாரணத் தொகையை அறிவித்த என்.எல்.சி நிறுவனம் தொகையை முழுமையாக வழங்கவில்லை எனவும் வீடு மற்றும் விளை நிலங்களை கொடுத்த விவசாயிகள் குடும்பத்தினர் ஒருவருக்கு வேலை வழங்குவதாக அறிவித்துவிட்டு இன்று வரை வேலை வழங்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் நெய்வேலி மந்தாரக்குப்பம் பகுதியில் உள்ள நிலை எடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நிலை எடுப்பு அலுவலகத்திற்கு உள்ளே செல்ல முயன்ற விவசாயிகளை காவல்துறையினர் நுழைவாயிலேயே தடுத்து நிறுத்தியதால் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நில எடுப்பு அலுவலகம் எதிரே நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.