1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : சனி, 25 ஏப்ரல் 2015 (10:48 IST)

ரேஷன் கடை ஊழியர் தூக்கிட்டுத் தற்கொலை: அதிகாரிகள் நெருக்கடி கொடுத்ததாக கடிதம்

சென்னை வண்ணாரப்பேட்டையில் அதிகாரிகளின் நெருக்கடியால் ரேஷன் கடை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார், இது குறித்து அவர் எழுதிய கடிதம் காவல்துறையினர் கைப்பற்றினர்.
 
சென்னை எண்ணூர் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். அவருக்கு வயது 50. இவர், எண்ணூரில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி உமா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். 
 
கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை விட்டு பிரிந்து வண்ணாரப்பேட்டை மாடர்ன் லைன் பகுதியில் உள்ள தனது தம்பி கவுதம் வீட்டில் இளங்கோவன் வசித்து வந்தார். 
 
கடந்த சில நாட்களாக தனக்கு வேலைப்பளு அதிகம் இருப்பதாக வீட்டில் இருந்தவர்களிடம் இளங்கோவன் கூறி வந்து உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத போது இளங்கோவன், வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
 
இது குறித்து தகவர் அறிந்து வந்த வண்ணாரப்பேட்டை காவல்துறையினர் இளங்கோவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டபோது அவர் தன் கைப்பட எழுதிய கடிதம் காவல்துறையினர் கைப்பற்றினர். 
 
அந்தக் கடிதத்தில், மேல் அதிகாரிகள் தனக்கு கொடுத்த நெருக்கடியால் மனம் உடைந்து தற்கொலை செய்துகொள்வதாகவும், இந்த கடிதத்தை தன்னுடைய மரண வாக்குமூலமாக எடுத்து கொள்ள வேண்டும் எனவும், மேலும் தனக்கு நெருக்கடி கொடுத்த மேல் அதிகாரிகளின் பெயரையும் குறிப்பிட்டு இருந்ததாகவும்  காவல்துறையினர் தெரிவித்தனர்.
 
அந்த கடிதத்தை கைப்பற்றிய காவல்துறையினர், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இளங்கோவன் தற்கொலைக்கு காரணமாக இருந்த அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி அவரது உறவினர்கள் வண்ணாரப்பேட்டை கல்லறை சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
 
சமீபத்தில் வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி, மேலதிகாரிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக ரயிலின்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.