1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 7 மார்ச் 2019 (09:32 IST)

எழுவர் விடுதலை , மாநிலங்களின் உரிமை – மோடி மேடையில் ராமதாஸ் பேச்சு !

நேற்று சென்னையில் நடைபெற்ற அதிமுக தலைமையிலானக் கூட்டணி மாநாட்டில் ராமதாஸ் சில முக்கியமான விஷயங்களைப் பேசினார்.

பிரதமர் மோடி இந்த ஆண்டில் நேற்று மூன்றாவது முறையாக தமிழகம் வந்தார். தமிழகத்தில் பாஜக கூட்டணி இடம்பெற்றுள்ள அதிமுக அணியில் உள்ள கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன்  ஒரே மேடையில் தோன்றி பிரச்சாரத்தில் ஈடுபடும் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதற்காக வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 100 ஏக்கர் நிலத்தில் பிரமமாண்ட பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.

மாலை 6 மணிக்குத் தொடங்கிய கூட்டத்தில் மோடி உரையாற்றினார். அதன் பின்னர் கூட்டணிக் கட்சி தலைவர்களில் ராமதாஸ் மட்டுமே பேசினார். அவர் பேசும் போது அதிமுக மற்றும் பாஜக  ஆகியவற்றோடு ஏன் கூட்டணி அமைத்தோம் என்றும் இந்தக் கூட்டணியின் வெற்றிக் குறித்தும் பேசினார். மேலும் எழுவர் விடுதலை என்ற கோரிக்கை மனுவையும் மோடியிடம் ஒப்படைத்தார்.

அவரது பேச்சில் ’27 ஆண்டுகளாக சிறையில் உள்ள ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதை கோரிக்கை மனுவாகப் பிரதமரிடம் அளித்துள்ளேன். நிச்சயம் அது நடைபெறும் என்று நாம் நம்புவோம். தமிழகத்தில் இந்தக் கூட்டணி வெற்றி பெறவில்லை என்று சொன்னால் வேறு எந்தக் கூட்டணியும் வெற்றி பெறாது.  அவசரநிலைக் காலகட்டத்தின் போது மாநில அரசின் பட்டியலில் இருந்த கல்வியை மத்திய அரசு தன் பக்கம் எடுத்துக்கொண்டது. அதனால் மாநில அரசுகள் சவலைப் பிள்ளைகளாக் உள்ளன’ எனக் கூறினார்.

மோடியை வைத்துக்கொண்டே மத்திய அரசுக்கெதிராக அவர் பேசியுள்ளது மாநாட்டில் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது.