வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: வியாழன், 30 ஜூலை 2015 (17:40 IST)

தமிழகத்தில் மக்கள் கந்து வட்டி கொடுமையில் சிக்கி கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கின்றன - ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தவறான கொள்கைகளை கடைபிடித்து வருவதன் காரணமாக தமிழக அரசு மீளாக்கடன் துயரில் சிக்கித்தவித்து வருவது அனைவரும் அறிந்த உண்மை தான். தமிழக அரசின் தவறான வழிநடத்தலால் ஏழை-நடுத்தர குடும்பங்களும் கந்து வட்டி கொடுமையில் சிக்கி கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கின்றன.
 
தமிழகம் முழுவதும் கந்து வட்டி பெரும் கொடுமையாக உருவெடுத்திருக்கிறது. குழந்தைகளின் கல்வி மற்றும் குடும்பத்தினரின் மருத்துவச் செலவுகளை சமாளிக்க முடியாத மக்கள் வேறு வழியின்றி கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்குகின்றனர். தமிழகத்தில் நகர்ப்புற மக்களின் தனிநபர் கடன்சுமை ரூ.1.16 லட்சமாகவும், ஊரக மக்களின் கடன்சுமை ரூ.45,803 ஆகவும் அதிகரித்திருப்பதாக தேசிய மாதிரிக்கணக்கெடுப்பில் தெரியவந்திருக்கிறது.
 
இத்தகைய கடன்களுக்கு அதிகபட்சமாக 60 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுவதால், அதைக்கட்ட முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். கடனை அடைப்பதற்காக மீண்டும் வட்டிக்கு கடன் வாங்குவது என கந்து வட்டி புதைகுழியில் சிக்கும் பலர் சொத்துக்களையும், சிலர் உயிரையும் இழக்கின்றனர்.
 
தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் அதிமுகவும், திமுகவும் மக்களின் வாக்குகளை அறுவடை செய்ய வேண்டும் என்பதற்காக எப்போதும் மலிவான அரசியலையே செய்து வருகின்றன என்பதையும், அதனால் தமிழக அரசின் பொருளாதார நிலை மோசமடைவதுடன், மக்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை பல்வேறு தருணங்களில் ஆதாரத்துடன் தெரிவித்து வந்திருக்கிறேன். எனது இந்தக் குற்றச்சாற்று உண்மை என்பதை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
 
தமிழக அரசு செயல்படுத்திவரும் இலவசத் திட்டங்களால் எந்த பயனும் இல்லை என்பதை பொதுமக்கள் தெரிவித்தக் கருத்துக்கள் விளக்குகின்றன. தரமான கல்வி மற்றும் மருத்துவத்தை இலவசமாக வழங்குவதன் மூலம் தான் தமிழக மக்களை கடன் சுமையிலிருந்து மீட்க முடியும்.
 
ஆனால், தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் கட்சிகளால் இது முடியாமல் போனது அவர்களின் இயலாமையை காட்டுகிறது. கல்வி, மருத்துவம், விவசாயம் ஆகியவற்றுக்கு அனைத்தும் இலவசம் என்பது தான் பாமக கொள்கை என்பதால் பாமக ஆட்சியில் தமிழக மக்களின் கடன் சுமை நிரந்தரமாக அகற்றப்படுவது உறுதி என்று அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.