வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 28 ஜூலை 2016 (13:30 IST)

பாலாற்றின் துணை ஆற்றில் மேலும் ஓர் அணை : அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்? : ராமதாஸ் கேள்வி

பாலாற்றின் குறுக்கு மேலும் தடுப்பனை கட்டும் முயற்சியில் ஆந்திர அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


 

 
ஆந்திராவில் பாலாற்றின் துணை ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணைக் கட்டும் பணியை அம்மாநில அரசு தொடங்கியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நீர்ப் பகிர்வு ஒப்பந்தங்களை மதிக்காமல் ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதும் உயரத்தை அதிகரிப்பதும் கண்டிக்கத்தக்கதாகும்.
 
கர்நாடகத்தில் உருவாகும் பாலாறு ஆந்திரா வழியாக தமிழ்நாட்டில் பாய்கிறது. ஆந்திரத்தில் மொத்தம் 33 கி.மீ. தொலைவுக்கு மட்டுமே பாயும் பாலாற்றின் குறுக்கே மொத்தம் 22 தடுப்பணைகளை அம்மாநில அரசு கட்டியிருக்கிறது. தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணையின் உயரம் அதிகரிக்கப்படுவதாக தகவல் கிடைத்தவுடன், அதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கடந்த மாதம் 30 ஆம் தேதி அறிக்கை வெளியிட்டேன்.
 
அதைத்தொடர்ந்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதியதுடன் தமது கடமையை ஜெயலலிதா முடித்துக் கொண்டார். ஆனால், ஆந்திர அரசு ஓயவில்லை. பாலாற்றின் குறுக்கே உள்ள 5 தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிப்பதுடன், பாலாற்றின் துணை ஆறுகளில் 7 புதிய தடுப்பணைகளை கட்டுவதற்கான பணிகளை தீவிரப்படுத்தி வந்தது. இப்பணிகளை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததையடுத்து சில இடங்களில் மட்டும் கட்டுமான பணிகளை ஆந்திரா நிறுத்தியது.
 
ஆனால், கடந்த சில நாட்களாக கட்டுமானப் பணிகளை ஆந்திர அரசு மீண்டும் தொடங்கியுள்ளது. அதுமட்டுமின்றி, பாலாற்றின் மற்றொரு துணை ஆறான ஜிங்க் காட்டாற்றின் குறுக்கே 18 அடி உயர தடுப்பணை கட்டும் பணிகளையும் ஆந்திர அரசு தொடங்கியுள்ளது. பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ள புல்லூரில் இருந்து 2 கி.மீ. தொலைவில் இந்த தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இதற்காக 18 அடி உயரத்திற்கு மண் கொட்டி தடுப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ரூ. 6 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த பணிகளை அடுத்த சில வாரங்களில், வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கும் தண்ணீரை புதிய தடுப்பணையில் சேமித்து வைக்க ஆந்திர அரசு தீர்மானித்திருக்கிறது.
 
மண்டாகாடு வனப்பகுதியில் அம்மாபாதம் மலைக்கும், சவளை மலைக்கும் இடையே உற்பத்தியாகும் இந்த காட்டாற்றில் பருவமழை காலத்தில் அதிக அளவில் மழை பெய்யும். இம்மழை மூலம் கிடைக்கும் தண்ணீர் புல்லூர் தடுப்பணையையும் தாண்டி பாலாற்றில் தமிழக எல்லைக்குள் பாயும். இதனால் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன. ஆனால், இப்போது ஜிங்க் காட்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுவதால் பாலாற்றில் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது.
 
பாலாற்று நீரை பயன்படுத்துவது குறித்து அப்போதைய சென்னை மாகாணத்திற்கும், மைசூர் இராஜதானிக்கும் இடையே 1892 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் கடைமடை பாசன மாநிலத்தின் ஒப்புதல் இல்லாமல் புதிய அணைகளை கட்டக்கூடாது என்று தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. அதற்கு மாறாக ஆந்திர அரசு புதிய தடுப்பணைகளை கட்டுவதும், ஏற்கனவே கட்டப்பட்ட அணைகளின் உயரத்தை அதிகரிப்பதும் சட்டவிரோதமாகும்.
 
இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில், அதையும் மீறி ஜிங்க் ஆற்றில் புதிய தடுப்பணையை ஆந்திர அரசு கட்டுவதும், அதை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வரும் 2-ஆம் தேதி பார்வையிட இருப்பதும் உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். அரசியலமைப்புச் சட்டம், உச்சநீதிமன்றம், இரு தரப்பு ஒப்பந்தம் உள்ளிட்ட எதையும் மதிக்காமல் ஆந்திர அரசு செயல்படும் நிலையில், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்? என்று தெரியவில்லை.
 
பாலாறு மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகளை கட்டும் பணியை ஆந்திர அரசு தொடங்கி 50 நாட்களுக்கும் மேலாகும் நிலையில், இந்த விஷயத்தில் தமிழக அரசு மென்மையான அணுகுமுறையை கடைபிடிப்பது தமிழக மக்களுக்கு இழைக்கும் துரோகம் ஆகும். சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக காவிரிப் பிரச்சினையில் கர்நாடகத்தை எதிர்க்க முதல்வர் ஜெயலலிதா தயங்குவதாக கூறப்படுகிறது. ஆனால், பாலாறு பிரச்சினையிலும், 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விஷயத்திலும் ஆந்திராவிடம் ஜெயலலிதா பணிந்து போவதன் மர்மம் என்ன? என்பது இதுவரை விளங்கவில்லை. மத்திய அரசும் இந்த விஷயத்தில் தலையிடாமல் ஆந்திராவுக்கு சாதகமாக ஒதுங்கியிருப்பது சரியல்ல.
 
பாலாற்றில் தமிழகத்திற்கு கிடைக்கும் தண்ணீரை தடுக்கும் ஆந்திராவின் முயற்சிகளைத் தடுக்க இரு வழிகளில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் தலைமையில் அமைச்சர்கள் குழு உடனடியாக தில்லி சென்று பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பாலாற்றிலும், அதன் துணை ஆறுகளிலும் தடுப்பணை கட்டும் பணிகளை தடுத்து நிறுத்தும்படி வலியுறுத்த வேண்டும். அடுத்ததாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணையை துரிதப்படுத்தி, பாலாறு மற்றும் அதன் துணை ஆறுகளில் அணை கட்டுமானப்பணிகளை மேற்கொள்ள தடை பெற வேண்டும்.
 
என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.