ரசிகர்களுக்கு டிக்கெட் இல்லையா? : கொந்தளித்த இயக்குனர் ரஞ்சித்
கபாலி படம் வெளியானபோது முதல் நாள் முதல் காட்சி பார்க்கவேண்டும் என்று பலரும், ஏதோ ஒரு காட்சி ஆனால் முதல் நாளில் படத்தை பார்த்துவிட வேண்டும் என்று ரஜினி ரசிகர்கள் பலரும் முயற்சி செய்தனர்.
ஆனால், பலருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. முன்பதிவு மூலம் ஏராளமான டிக்கெட்டுகளை, திரையரங்க உரிமையாளர்கள் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விற்றுவிட்டதாக கூறப்பட்டது. அதேபோல், முதல் நாளன்று கபாலி பட டிக்கெட்டின் விலை ரூ.300 லிருந்து 2000 வரை விற்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
இதுபற்றி கருத்து தெரிவித்த கபாலி படத்தின் இயக்குனர் ரஞ்சித் “ முதல் நாளன்று ரஜினி ரசிகர்களுக்கு டிக்கெட் கிடைக்காதது நியாயமே இல்லை. காசி திரையரங்கில் நான் படம் பார்த்தபோது எல்லோரும் இதுபற்றி என்னிடம் கேட்டார்கள். அது மிகவும் கஷ்டமாக இருந்தது. அவர்கள்தான் படத்தை மிகவும் புரமோட் செய்தார்கள். அவர்களுக்கு டிக்கெட் இல்லை என்பது நியாயமே இல்லை.
மேலும், டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. இதில் எனக்கு ஒரு சதவிகித உடன்பாடும் இல்லை. அதை தடுக்கும் சக்தி இருந்திருந்தால் கண்டிப்பாக தடுத்திருப்பேன்” என்று கூறியுள்ளார்.