1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 18 ஜூன் 2022 (23:16 IST)

அக்னிபத் திட்டத்தில் இணைவதற்கான வயது வரம்பு உயர்வு

அக்னிபத் திட்டத்தில் சேருவதற்கான வயது வரம்பை இந்திய அரசு 21ல் இருந்து 23 ஆக உயர்த்தியதற்காக பிரதமர் நரேந்திரமோதிக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டரில் நன்றி தெரிவித்ததாக தினத்தந்தி இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
 
'அக்னிபத்' திட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடந்து வரும் நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் அத்திட்டம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.
 
தனது 'டுவிட்டர்' பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:- கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக ராணுவ ஆள்தேர்வு நடக்கவில்லை. அதனால், ராணுவத்தில் சேருவதற்கு ஏராளமான இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
 
இதை மனதில் கொண்டு, பிரதமர் மோடி உத்தரவின்பேரில், அக்னிபத் திட்டத்தில் சேருவதற்கான வயது வரம்பை மத்திய அரசு 21-ல் இருந்து 23 ஆக உயர்த்தி உள்ளது. பிரதமரின் அக்கறைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
 
இதனால், ராணுவத்தில் சேர இன்னும் கணிசமான இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ராணுவ பணியை விரும்பும் இளைஞர்களுக்கு இத்திட்டம் பொன்னான வாய்ப்பு. இன்னும் சில நாட்களில், அக்னிபத் திட்டத்துக்கு ஆள் தேர்வு செய்யும் பணி தொடங்கும். ராணுவ பணியை விரும்பும் இளைஞர்கள் அதற்காக தயாராக வேண்டும் என்று அவர் கூறியுள்ளார் என அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேருவோருக்கு மத்திய ஆயுதப்படை, அசாம் ரைபிள்ஸ் பிரிவில் பணியாற்றுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.