1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வியாழன், 26 நவம்பர் 2015 (15:25 IST)

மாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்திட வேண்டும்: ஜி.கே.வாசன்

அரசு, தனியார் பள்ளி, கல்லூரி வளாகங்களையும், தங்குமிடங்களையும் சீரமைத்து, மாணவர்களின் பாதுகாப்பினை நிர்வாகமும், அரசும் உறுதிப்படுத்திட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.


 

 
இது குறித்து ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
மத்திய அரசின் அதிகாரிகள் கொண்ட ஆய்வுக்குழு தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, வெள்ளச் சேதப்பகுதிகளை பார்வையிடுகின்றது.
 
தமிழகத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் பயிர்கள், சாலைகள், பாலங்கள், வீடுகள், தாழ்வானப் பகுதி குடிசைகள் போன்றவை பெருத்த சேதமடைந்துவிட்டன.
 
பல இடங்களில் உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது. மக்கள் கால்நடைகளையும் இழந்திருக்கிறார்கள். மழையால் மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து, பெரும்பாலானவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு இன்னும் திரும்பமுடியாமல் முகாம்களில் தங்கியிருக்கிறார்கள்.
 
தமிழக அரசு அறிவித்த நிவாரணத் தொகை ரூபாய் 500 கோடி முதல் கட்டமாக இருக்க வேண்டும். இரண்டாவது கட்டமாக அதிக தொகையை அறிவிக்க வேண்டும்.
 
மேலும் தமிழகம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டு சேதமடைந்த, சேதமடையும் நிலையில் உள்ள அரசு, தனியார் பள்ளி, கல்லூரி வளாகங்களையும், தங்குமிடங்களையும் சீரமைத்து, மாணவர்களின் பாதுகாப்பினை நிர்வாகமும், அரசும் உறுதிப்படுத்திட வேண்டும்.
 
மத்திய அரசு அறிவித்த முதல்கட்டத் தொகையான 940 கோடி ரூபாய் போதுமானதல்ல. தற்போது மத்திய அரசின் அதிகாரிகள் கொண்ட ஆய்வுக் குழுவானது கடலூர், காஞ்சி, திருவள்ளூர், சென்னை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள இருக்கிறது.
 
இருப்பினும் இந்த ஆய்வுக் குழுவானது தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்தையும் குறிப்பாக தஞ்சை, நாகை, திருவாரூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட விளைநிலங்களையும் ஆய்வு செய்து, காட்டாற்று வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துப்போன தூத்துக்குடி மாவட்டத்திற்கும், திருநெல்வேலி மாவட்டப் பகுதிக்கும் சென்று முழுமையாக ஆய்வு செய்திட வேண்டும்.
 
அதனடிப்படையில் தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், மக்களுக்கும் முழு நிவாரணத்தை அளித்திடவும், சிறு குறு தொழில் புரிவோர்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கும் உதவிட மத்திய அரசு முன்வர வேண்டும்.
 
மேலும் தமிழக விவசாயிகளுக்கு வணிக வங்கிகள், நபார்டு வங்கிகள் வழங்கிய பயிர்க்கடன், விவசாயக்கடன் முழுவதையும் மத்திய அரசு தள்ளுபடி செய்திடவும், விவசாயிகள் மறுசுழற்சி அடிப்படையில் விவசாயம் மேற்கொள்ள அவர்களுக்கு கடனுதவி வழங்கிடவும் மத்திய ஆய்வுக்குழு மத்திய அரசுக்கு பரிசீலனை செய்திட வெண்டும்.
 
இதற்காக தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். மழை வந்த பின்பு நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றாலும், மழை வருமுன் மக்களைக் காப்பாற்ற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியது அரசின் கடமையாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.