1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 27 மார்ச் 2021 (09:48 IST)

கொரோனா சங்கிலியை உடைக்க வேண்டும்: ராதாகிருஷ்ணன் !

பொதுமக்களிடம் முகக்கவசம் அணியும் வழக்கம் அறவே இல்லை, மருத்துவமனைகளுக்கு உள்ளேயே விதிகள் பின்பற்றப்படவில்லை என சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் புகார். 

 
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா  சிகிச்சை மையத்தை பார்வையிட்ட பிறகு சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மார்ச் 1 முதல் கொரோனா  படிப்படியாக உயர்ந்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தவே பள்ளி , கல்லூரி , உயர் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளித்துள்ளோம்.
 
முகக் கவசம் அணியும் வழக்கம் பொதுமக்களிடம் அறவே இல்லாமல் போய்விட்டது . விதிகளை முறையாக பின்பற்றாததால்  காஞ்சி , கிண்டியில் கல்வி நிலையங்களில் கொரோனா பரவியுள்ளது. காவல்துறை , சுகாதார அதிகாரிகளை பார்த்த பிறகே முகக் கவசம் அணிகின்றனர். மருத்துவமனைக்கு உள்ளேயே கொரோனா விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை.பலர் முகக்கவசம் அணியாமல் அமர்ந்துள்ளனர். 
 
உருமாறிய கொரோனா பாதிப்பு தமிழகத்தில் தற்போது இல்லை.இரட்டிப்படையும் வேகமும் தமிழகத்தில் இல்லை.  ஐடிஐ களை உடனடியாக மூடாமல் பரிசோதித்த பிறகு மாணவர்களை அனுப்பி வைக்க வேண்டும். அதுவே சரியான நடைமுறை. 
 
கிராமங்களில் 1.28 லட்சம் குடியிருப்பில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பில் கொரோனா பாதிப்பு. நகரங்களில் 1.22 லட்சம் தெருவில் 3, 960 தெருவில் கொரோனா பாதிப்பு இருக்கிறது. மொத்தமாக தமிழகத்தில்  512 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அன்றாட பாதிப்பு மேலும் உயர்வு அடைந்து 2,000 பாதிப்புகளை தொட வாய்ப்பு , பிறகுதான் குறைய தொடங்கும். ரெம்டெசிவீர் உள்ளிட்ட தடுப்பு மருந்துகள் போதுமான அளவு இருப்பு உள்ளது.
 
தமிழகத்தில் இதுவரை 39 ஆயிரத்து 70 லட்சம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது . 14 லட்சம் தடுப்பூசி இருப்பில் உள்ளது. மேலும் 10 லட்சம் தடுப்பூசி தமிழகம் வர உள்ளது. 357 கிலோ லிட்டரிலிருந்து 778 கிலோ லிட்டராக ஆக்சிஜன் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளில் இவை பயன்படும். 
 
பரிசோதனை மேற்கொள்ளாமல் கொரோனா குறைந்து விட்டதாக கணக்கு காட்டலாம். ஆனால் நாம் தொடர்ந்து கூட்டம் மிகுந்த இடங்களில் பரிசோதனை மேற்கொள்கிறோம். 450 ஐ தொட்டபோதே எச்சரித்தோம் , கொரோனா சங்கிலியை உடைக்க முகக் கவசம் அவசியம்.வேறு வழியே இல்லை. நாக்பூரில் பொதுமக்களிடையே வதந்தி பரவியது கொரோனா அதிகரிக்க காரணமாக அமைந்தது. 
 
தடுப்பூசியை அதிகரிக்க வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல்  , ஹோலி , பங்குனி உத்திரம் பண்டிகை குறித்து கண்காணிக்க கூறியுள்ளோம். தேர்தல் கூட்டங்களில் முகக் கவசம் அணியாவிட்டால் சென்ட்ரல் ஐடிஐ யில் பரவியது போல கொரோனா பரவ வாய்ப்பு .
 
தேர்தலுக்கு வாக்களிக்க செல்வோர்  சிறப்பு பேருந்துகளில் கடைசி நேரத்தில் செல்லாமல் முன்கூட்டியே செல்ல முயற்சிக்க வேண்டும். ஏறுமிடம் , சேருமிடங்களில் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்வது குறித்து போக்குவரத்து செயலாளரிடம் கூறியுள்ளோம்.
 
சிபிஎஸ்இ பள்ளிகளில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயமாக பின்பற்றுமாறு கூறியுள்ளோம். தேர்தல் பணியாளர்களில் 40 விழுக்காட்டினர் மட்டுமே தடுப்பூசி எடுத்து கொண்டுள்ளனர். விதிகளை மீறி செயல்படும் பள்ளி , கல்லூரியில் சுகாதார சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நிலையான வழிமுறைகளை பின்பற்றி, முகக்கவசம் அணிந்தால்  100 விழுக்காடு பணியாளர்கள் இருந்தாலும் கொரோனா பரவாது என்று கூறினார்.