1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : திங்கள், 2 மார்ச் 2015 (12:05 IST)

டீ கடைகாரரை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற ரவுடியை மடக்கிப் பிடித்து தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்

புதுச்சேரி வில்லியனூர் அருகே மாமூல் தர மறுத்த டீகடை வியாபாரியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற ரவுடியை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
 
புதுச்சேரி வில்லியனூர் சுல்தான்பேட்டையைச் சேர்ந்தவர் பாதின். இவருக்கு வயது 36. இவர் சுல்தான்பேட்டை பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். 
 
பாதின், வழக்கம் போல டீகடையில் வேலைசெய்து கொண்டிருந்தார். மாலை 4 மணியளவில் டீக்கடைக்கு குடிபோதையில் வந்த வாலிபர் ஒருவர் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார்.
 
ஆனால், பாதின் மாமுல் தர முடியாது என்று கூறியுள்ளார். அப்போது அந்த வாலிபர் மாமூல் தராவிட்டால் கடையை கொளுத்தி விடுவதாக மிரட்டியபடி அங்கிருந்து சென்றுள்ளார்.
 
இந்நிலையில் மீண்டும் 6 மணி அளவில் அதே வாலிபர் கையில் பெட்ரோல் கேனுடன் டீக்கடைக்கு வந்துள்ளார். அங்கு பஜ்ஜி போட்டுக்கொண்டிருந்த பாதின் மீது திடீரென பெட்ரோலை ஊற்றியுள்ளார்.
 
அப்போது, அடுப்பிலிருந்த தீ பாதின் மீது பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனால் அவர் அலறித் துடித்துள்ளார். இதைப்பாத்த அக்கம் பக்கத்தினர் பாதின் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துள்ளனர். இதனால், லேசான தீக்காயங்களுடன் பாதின் உயிர் தப்பினார்.
 
இதைத் தொடர்ந்து, அக்கம் பக்கத்திலிருந்த கடைக்காரர்கள் உள்ளிட்ட பொது மக்கள், பெட்ரோல் கேனுடன் தப்பி ஓட முயன்ற அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
 
அத்துடன், சுல்தான்பேட்டை வியாபாரிகள் ஒன்றுதிரண்டு வில்லியனூர் காவல்நிலையத்திற்குச் சென்று, மாமூல் கேட்டு வியாபாரியை எரித்து கொல்ல முயன்ற வாலிபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி முறையிட்டனர்.
 
அவர்ளிடம் காவல்துறையினர், இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனை ஏற்றுகொண்ட வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் பிடிபட்ட வாலிபரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
 
விசாரணையில் அவர் பெயர் கணேசன் என்பதும் வில்லியனூர் அரும்பார்த்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், அவர் மீது ஏற்கனவே அந்த பகுதி காவல்நிலையங்களில் வழக்குகள் இருப்பதும தெரிய வந்தது.
 
இதனை தொடர்ந்து காவல்துறையினர் கணேசனை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.