1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: சனி, 1 ஜூலை 2017 (05:30 IST)

தமிழகத்தை அடுத்து புதுச்சேரியிலும் காலவரையின்றி தியேட்டர்கள் மூடல்

ஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் திங்கள் முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளில் காலவரையின்றி மூடப்படுவதாகவும் அனைத்து காட்சிகளும் ரத்து செய்வதாகவும் தமிழக திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அபிராமி ராமநாதன் நேற்று அறிவித்தார்.



 
 
இந்த நிலையில் தமிழகத்தை அடுத்து புதுச்சேரியிலும் காலவரையின்றி தியேட்டர்கள் மூடப்படவுள்ளதாக புதுச்சேரி திரையரங்கங்கள் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் லக்கி பெருமாள் தெரிவித்துள்ளார்.
 
ஜிஎஸ்டி வரிமுறை இன்று அதிகாலை 12 மணி முதல் அமலுக்கு வந்துவிட்டதால் இன்றுமுதல் புதுச்சேரியில் உள்ள தியேட்டர் கட்டணங்கள் குறித்த திருத்தப்பட்ட கட்டணத்தை புதுச்சேரி அரசு அறிவித்தது. இதன்படி ஏ.சி திரையரங்குகளில் பாக்ஸ் ரூ.175, பால்கனி/டீலக்ஸ் ரூ.160, முதல் வகுப்பு ரூ.105, இரண்டாம் வகுப்பு ரூ.80, மூன்றாம் வகுப்பு ரூ.50 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 
ஏ.சி இல்லாத திரையரங்குகளில் பாக்ஸ் ரூ.70, பால்கனி/டீலக்ஸ் ரூ.55, முதல் வகுப்பு ரூ.45, இரண்டாம் வகுப்பு ரூ.35, மூன்றாம் வகுப்பு ரூ.30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட புதிய டிக்கெட்டுக்களின் விலையை ஜுலை 7-ம் தேதிக்குள் திரையரங்குகளின் உரிமையாளர்கள் வசூலிக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.
 
ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தால் மாநில அரசின் வரி ரத்து செய்யப்படும் என்றுதான் கூறப்பட்டது. ஆனால் தமிழக, புதுச்சேரி அரசுகள் மாநில அரசின் வரியையும் கட்ட வேண்டும் என்று அறிவித்துள்ளதால் டிக்கெட் கட்டணத்தில் 50% வரிக்கே போய்விடுவதாக புதுச்சேரி திரையரங்கங்கள் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் லக்கி பெருமாள் தெரிவித்துள்ளார். எனவே மாநில அரசு கேளிக்கை வரியை ரத்து செய்யும் வரை புதுச்சேரியில் உள்ள அனைத்து திரையரங்குகளும் காலவரையின்றி மூடப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.