1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 30 மே 2015 (13:30 IST)

சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவ அமைப்பினர்: போலீஸ் மோதலால் பரபரப்பு!

சென்னை ஐஐடி மாணவர்களின் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து மறியலில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 

 
அம்பேத்கர் பெரியார் ஸ்டடி சென்டர் (ஏபிஎஸ்சி) என்ற அமைப்பினை சென்னை ஐஐடி மாணவர்கள்  நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பு மீது சிலர் புகார் தெரிவித்தனர்.
 
அதில், " ஏபிஎஸ்சி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசின் கொள்கைகளை அவதூறாக விமர்சித்தும், பிரதமர் மோடி மற்றும் இந்து மதத்தினருக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரம் செய்கின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதியன்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணைச் செயலர் பிரிஸ்கா மேத்யூ -விடம் இருந்து சென்னை ஐஐடி தலைமைக்கு இவ்விவகாரம் தொடர்பாக விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பட்டது. இதனையடுத்து புகார் கடிதத்தையும், மத்திய அரசு விளக்கம் கோரி அனுப்பிய கடிதத்தையும் சுட்டிக்காட்டி சென்னை ஐஐடி தலைவர், ஏபிஎஸ்சி அமைப்புக்கு தடை விதித்துள்ளார்.
 
இந்தத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை ஐஐடி எதிரே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் புரட்சிக்கர மாணவர் இளைஞர் முன்னணியினர் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயன்றனர்.
 
அப்போது, இரண்டு  தரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை கண்டித்து மாணவர் அமைப்பினர் முழக்கமிட்டனர். தொடர்ந்து மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை காவல்துறையினர் வேனில் ஏற்ற முயன்றனர். அப்போது, வேனில் ஏற மறுத்து மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
இதனிடையே, தடை வாபஸ் பெறும் வரை போராட்டம் தொடரும் என மாணவர் அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 
இந்நிலையில், இதே பிரச்சனைக்காக சென்னை சாஸ்திரிபவன் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி.- எஸ்.டி. பிரிவு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. இதனால் அங்கு ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
 
தந்தை பெரியார் திராவிடர் கழகம், அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கத்தை சேர்ந்தவர்கள் சென்னை ஐஐடி அருகே உள்ள மத்திய கைலாஷ் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மத்திய கைலாஷில் இருந்து ஐஐடி நோக்கி பேரணியாக செல்ல அவர்கள் முயன்றதால் காவல்துறையினர் கைது செய்தனர்.
 
சென்னை ஐஐடி மாணவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் குதித்துள்ளதால் போராட்டம் மேலும் வலுவடைந்து வருகிறது.