வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 7 மார்ச் 2018 (11:23 IST)

ஹெச்.ராஜாவிற்கு எதிர்ப்பு - சென்னை, மதுரையில் வலுக்கிறது போராட்டம்

பெரியார் சிலை குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்துள்ளது.

 
பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்திலும் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என சர்ச்சைக்குரிய ஒரு பதிவை பதிவு செய்திருந்தார். இந்த பதிவுக்கு கடும் கண்டங்கள் எழவே, அந்த பதிவை அவர் சில மணி நேரங்களில் நீக்கிவிட்டார்.  
 
அந்நிலையில், வேலூர் மாவட்டம்திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இருந்த தந்தை பெரியார் சிலையை இந்துத்துவா அமைப்பு மற்றும் பாஜகவை சேர்ந்த சிலர் உடைத்தனர். அதைக்கண்டு கொதித்தெழுந்த பொதுமக்கள் சிலர் அவர்களில் 4 பேரைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அதன் பின் அந்த 4 பேர் மீதும் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 
இந்நிலையில், மதுரையில் பாஜக அலுவலகத்தை சிலர் முற்றுகையிட முயன்றனர். அப்போது, போலீசார் அவர்களை கைது செய்தனர். அதேபோல், சென்னை அண்ணாசாலையில் சுப. வீரபாண்டியன் தலைமையில் பலர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனக்கூறி அவர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர். மேலும், ஹெச்.ராஜாவின் உருவ பொம்மையை அவர்கள் எரித்தனர். மேலும், அவர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இதனால், சென்னை அண்ணாசாலைப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.