வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 5 ஆகஸ்ட் 2015 (00:03 IST)

மதுவிலக்குப் போராட்டத்தைக் காவல்துறை மூலம் அடக்க நினைப்பது புத்திசாலித்தனமல்ல: கி.வீரமணி

தமிழகத்தில், மது விலக்குக்கோரி நடத்தப்படும் போராட்டங்களைச் சட்டம் - ஒழுங்குப் பிரச்சனையாகக் கருதி, காவல்துறை மூலம் அடக்க நினைப்பது புத்திசாலித்தனமல்ல. அது போன்ற செயல்கள் எதிர் விளைவைத்தான் ஏற்படுத்தும் என்று தி.க.தலைவர் வீரமணி கூறியுள்ளார்.
 

 
இது குறித்து, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தமிழகத்தில் முழு மது விலக்குக்கோரி நாடெங்கும் போராட்டங்கள், யாருடைய தூண்டுதலுமின்றித் தன்னிச்சையாக நடை பெற்று வருகிறது. இந்தப் பிரச்சனையில் தமிழ்நாடு அரசு கொள்கை முடிவை எடுத்து, அறிவித்துப் படிப்படியாக மதுவிலக்கை செயல்படுத்துவதுதான் ஒரு நல்ல தீர்வாக இருக்க முடியும்.
 
மது விலக்குக்கோரி நடத்தப்படும் போராட்டங்களைச் சட்டம் - ஒழுங்குப் பிரச்சனையாகக் கருதி, காவல்துறை மூலம் அடக்க நினைப்பது புத்திசாலித்தனமல்ல. அது போன்ற செயல்கள் எதிர் விளைவைத்தான் ஏற்படுத்தும்.
 
சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், மாணவிகள் காவல்துறையால் கடுமையாகத் தாக்கப்பட்டதுடன் அவர்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுச் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார்கள். இந்தச் செயல், நாடு முழுவதும் அமைதியாக உள்ள மாணவச் செல்வங்களை வீதிக்கு வந்து போராடச் செய்யும் மறைமுகத் தூண்டுதல் ஆகும்.
 
அதேபோல மதிமுகப் பொதுச் செயலாளர் வைகோ. உள்ளிட்டோர்மீது 12 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வைகோ மீதான வழக்கை உடனே வாபஸ் வாங்க வேண்டும்; கைது செய்யப்பட்டவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும். எந்த நோக்கத்துக்காகப் போராடுகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அரசு செயல்பட வேண்டும்.
 
காலந்தாழ்த்தாமல் மதுவிலக்குக் கொள்கையில் அதிமுக அரசு மக்கள் மனம் கொள்ளும் வகையில் தக்க முடிவெடுத்து, செயல்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.