1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (13:22 IST)

சசிகலாவிற்கு சிறை நிர்வாகம் கெடுபிடி - அதிமுகவினர் அதிர்ச்சி

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவிற்கு சிறை நிர்வாகம் விதித்த கட்டுப்பாடுகள் அதிமுகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


 

 
சசிகலா தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பொதுவாக, ஒரு கைதியை வாரத்திற்கு 3 முறை மட்டுமே உறவினர்கள் சந்தித்து பேச முடியும். அதுவும், ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதி. ஆனால், சசிகலா அங்கு அடைக்கப்பட்டது முதல், தினந்தோறும், உறவினர்கள், வழக்கறிஞர்கள், கட்சி நிர்வாகிகள் என பலரும் சென்று அவரை சந்தித்து பேசி வருகின்றனர். அதுவும் 5 மணி நேரத்திற்கும் மேல் அவர்களின் சந்திப்பு நீடிக்கிறது.
 
இதுகுறித்து அங்கு சிறையில் இருக்கும் மற்ற கைதிகள் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. எனவே, விழித்துக் கொண்ட சிறை நிர்வாகம், தற்போது சசிகலாவிற்கு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இதனால்தான், சில நாட்களுக்கு முன்பு, அவரை சந்திக்க சென்ற வளர்மதி, கோகுல இந்திரா, சி.ஆர். சரஸ்வதி ஆகியோருக்கு அனுமதி கிடைக்கவில்லை. 
 
அதேபோல், சசிகலாவின் அறைக்கு அருகில் அடைக்கப்பட்டிருந்த கொலை குற்றவாளி சயனைடு மல்லிகா, பாதுகாப்பு காரணம் கருதி வேறு சிறைக்கு மாற்றப்பட்டார். அவரை காரணம் காட்டி, சசிகலாவை சென்னை சிறைக்கு மாற்ற திட்டமிட்டிருந்த, தினகரன் தரப்பிற்கு அது ஏமாற்றத்தில் முடிந்தது. 
 
தற்போது சசிகலாவை சந்திக்க கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளதால், அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.