வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 20 மே 2015 (22:01 IST)

"மக்களிடம் உண்டியல் வசூல் செய்து கட்சி நடத்துவது பெருமைதான்" - ஜி.ராமகிருஷ்ணன்

ஏழை மக்களிடம் உண்டியல் வசூல்செய்து கட்சி நடத்துவது மார்க்சிஸ்ட் கட்சிக்கு பெருமை தான் என ஜி.ராமகிருஷ்ணன் பேசியுள்ளார்.
 
விருதுநகரில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில மாநாட்டு பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஜி.ராமகிருஷ்ணன், ”பதவியைப் பயன்படுத்திமக்கள் வரிப்பணத்தை நாங்கள் கொள்ளையடிப்பதில்லை. மாறாக ஏழை மக்களிடம் உண்டியல் வசூல்செய்து கட்சி நடத்துவது மார்க்சிஸ்ட் கட்சிக்கு பெருமைதான்.
 

 
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கு கடந்தாண்டு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நான்காண்டு சிறை, 100 கோடி அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தது. கர்நாடக உயர்நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.
 
அப்போது, இது இறுதித் தீர்ப்பல்ல. மேல்முறையீடு செய்ய வேண்டுமென தெரிவித்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இதற்காக ‘நமது எம்.ஜி.ஆர்’ பத்திரிகையில் கேலிச்சித்திரம் வெளியிடப்பட்டிருந்தது. அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருவோடுதான் கொடுக்க வேண்டும் என்றவாசகத்தைப் போட்டிருந்தனர்.
 
பதவியையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி, மக்கள் வரிப்பணத்தை கோடி கோடியாகக் கொள்ளையடித்து விட்டு, நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நின்றதில்லை. இந்தியாவில் தோழர் இ.எம்.எஸ். துவங்கி, எட்டு முதலமைச்சர்களை உருவாக்கியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
 
அவர்கள் ஒருவர் மீது கூட ஊழல் குற்றச்சாட்டை யாரும் கூற முடியாது. நேர்மையாக ஆட்சி நடத்தியவர்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் வேளாண்துறை பொறியாளர் அமைச்சரின் நிர்ப்பந்தத்தால் தற்கொலை செய்து கொண்டார்.
 
திமுக தலைவரின் குடும்பமே ஊழலில் திளைக்கிறது. மக்கள்வரிப் பணத்தை கொள்ளையடிப்பதற்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும். தமிழகத்தில் தலித் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி வளர்ந்துள்ளது.
 
தலித் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க அவர்களின் தோளோடு தோள் நிற்கும் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்த, கேரளம், மேற்கு வங்கம், ஆட்சி செய்யும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் தீண்டாமைக் கொடுமைகள் இல்லை.
 
செங்கொடி இயக்கம் வலுவாக இருந்த கீழத்தஞ்சையில் தீண்டாமைக் கொடுமையின் முதுகெலும்பை ஒடித்த இயக்கம் செங்கொடி இயக்கம். தமிழகத்தில் பெரியாரின், அண்ணாவின் கையைப்பிடித்து வந்தவர்கள் நாங்கள் எனக் கூறுவார்கள். ஆனால், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தீண்டாமைக் கொடுமைகள் என்றால் வாய் திறக்க மறுப்பார்கள்” என்று கூறியுள்ளார்.