வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 9 அக்டோபர் 2015 (15:09 IST)

ஸ்டாலினை கலாய்த்த பிரேமலதா : ரசித்து சிரித்த விஜயகாந்த்

திமுக பொருளாளர் ஸ்டாலினை, பிரேமலதா கிண்டலடித்துப் பேசியதை விஜயகாந்த் சிரித்து ரசித்தார்.


கேப்டன் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவின் பேச்சு இப்போதெல்லாம், தேமுதிக பொதுக் கூட்டங்களில் பிரபலமாகி வருகிறது. அவர் அதிமுக மற்றும் திமுகவினரை கிண்டலடித்துப் பேசுவதை தேமுதிக-வின் தொண்டர்கள்  மிகவும் ரசிக்கிறார்கள்.திருநெல்வேலியில் ஆலங்குளத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசிய போது, ஸ்டாலினை ஒரு வாங்கு வாங்கினார். 
 
அவர் பேசிய போது “ முக ஸ்டாலின் தமிழகம் முழுவதும் நமக்கு நாமே என்று கிளம்பியிருக்கிறார். ஆட்டோ ஒட்டுகிறார்,பஸ்ஸில் போகிறார், ரோட்ல போற வர்றவங்களையெல்லாம் கூப்பிட்டு செல்பி எடுக்கிறார். எல்லாத்தையும் கூப்பிட்டு கைகொடுக்கிறார். திருநெல்வேலிக்கு போய் அல்வா சாப்பிடுகிறார்.
இதுவெல்லாம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால் நான் அவரிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். இதை நான் கேட்கவில்லை. அவர் போகும் இடங்களில் உள்ள மக்கள் கேட்கிறார்கள்.
 
செல்கிற இடமெல்லாம், நீங்க ரோடு சரியில்லை, பஸ் சரியில்லை என்று அதிமுகவை குறை கூறுகிறீர்கள். உங்கள் கட்சிதானே தமிழகத்தை 5 முறை ஆட்சி செய்தது. 25 ஆண்டுகள் இந்த தமிழ்நாடு உங்கள் கையில்தான் இருந்தது. அப்போது நீங்க ஊழல் இல்லாமல் ஆட்சி செய்திருந்தால், இப்போது அது சரியில்லை, இது சரியில்லை என்று கூறும் நிலைமை உங்களுக்கு வந்திருக்குமா?
 

 
அப்போது எதுவும் செய்யாமல், இப்போது தேர்தல் வருகிறது என்றதும் அடுத்த வாய்ப்பை எங்களுக்கு கொடுங்கள் என்று தெரு தெருவாக சுற்றி வருகிறீர்கள். ஆனால் மக்கள் உங்களை நம்பவில்லை. இப்போது மக்களை சந்திக்கும் நீங்கள், துணை முதல்வராகவோ, சென்னை மேயராகவோ இருந்தபோது இப்படி மக்களை தெருதெருவாக போய் சந்தித்ததுண்டா?

 
திமுகவில் எல்லார் பெயரும் உதயநிதி, அருள்நிதி, தாயாநிதி,காலாநிதி என்றுதான் பெயர் வைப்பார்கள். அதிமுக அமைச்சர்கள் பெயரெல்லாம் சுப்ரமணி,வேலுமணி,வீரமணி,தங்கமணி என்றுதான் இருக்கிறது. திமுக என்றால் நிதி. அதிமுக என்றால் மணி. தமிழக மக்கள் இவர்களை இனி நம்புவதற்குத் தயாராக இல்லை என்று பேசினார்.
 
பிரேமலதாவின் பேச்சைக் கேட்டு தொண்டர்கள் ஆர்ப்பரிக்க, மேடையில் இருந்த விஜயகாந்த் மிகவும் ரசித்து சிரித்தார்.