வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 11 மே 2019 (10:39 IST)

உண்மையில் என்ன நடந்தது ? – பூர்விகா மொபைல்ஸ் விளக்கம் !

சென்னையில் சில நாட்களுக்கு முன்னதாக பூர்விகா மொபைல்ஸ் கம்பெனி முன் செல்போனை எரித்த சம்பவம் தொடர்பாக பூர்விகா மொபைல்ஸ் தனது பக்க விளக்கத்தை அளித்துள்ளது.

சென்னையை அடுத்த தாம்பரம் அருகேயுள்ள கடப்பேரி பகுதியில்  வசித்து வருபவர் தலைமலை. இவரது மகன்  +2 பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இதனால், மகிழ்ச்சி அடைந்த தலைமலை மகனுக்கு ஒரு ஸ்மார்ட்போன் வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார். அதன்படி சென்னை குரோம் பேட்டையில் உள்ள ’பிரபல செல்போன் கடை’யில் தலைமலை ஒரு ரூ. 14ஆயிரம் மதிப்புள்ள செல்போன் வாங்கியுள்ளார் தலைமலை.

இதனையடுத்து சில நாட்களுக்குப் பின்னர் செல்போனில் சிம் கார்டு போட்ட போது அது ஆன் ஆகவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த  தலைமலை உடனே தான் செல்போன் வாங்கிய கடைக்கே திரும்பச் சென்று இதுபற்றி கடையில் உள்ள ஊழியர்களிடம் முறையிட்டார். அப்போது கடை ஊழியர்கள், செல்போன் வாங்கும் போது நன்றாகத்தான் இருந்தது. நீங்கள் சர்வீஸ் செண்டருக்குச் சென்று இதைக்கொடுத்து சரிசெய்யுங்கள் என்று கூறியுள்ளனர்.

ஆனால் தனக்கு இதற்கு பதிலாக வேறு போன் தான் வேண்டும் என அவர்களிடம் மன்றாடியுள்ளார் தலைமலை. அதற்கு கடை ஊழியர்கள் மறுத்துள்ளனர். இதனால் கடுப்பான தலைமலை தான் வாங்கிய செல்போன், அதன் பில் ஆகியவற்றை அக்கடையின் முன் வைத்து பெட்ரொல் ஊற்றி எரித்தார். செல்போல் மற்றும் பில் தீயில் கொளுந்துவிட்டு எரிந்தது. அருகில் இருந்தவர்கள் இதை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் இப்போது இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பூர்விகா மொபைல்ஸ் நிறுவனம் ‘ அவர் மொபைலைக் கொண்டு வந்த போது உடைந்து இருந்தது. விவோ நிறுவனமும் நாங்களும் பழுதடைந்த மொபைல் போனை சரிபார்த்து தருவதாக எவ்வளவு சொல்லியும் அந்த நபர் புதிய மொபைல் தரவேண்டும் என பிடிவாதமாக இருந்தார். அதற்கு வாய்ப்பில்லை எனக் கூறியபோது இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளார். ஊடக பலத்தின் மூலம்  இதை பெரிது படுத்தியிருக்கிறார்’ எனத் தெரிவித்துள்ளது.